தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை சிங்கள பௌத்த அடையாளங்களாக நிறுவவே தமிழர் வாழும் பகுதிகளில் அகழ்வாராய்வுப் பணிகள் - சிறிதரன் - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை சிங்கள பௌத்த அடையாளங்களாக நிறுவவே தமிழர் வாழும் பகுதிகளில் அகழ்வாராய்வுப் பணிகள் - சிறிதரன்

(நா.தனுஜா)

கந்தரோடை போன்ற இடங்களில் அகழ்வாராய்வுகளை மேற்கொள்ளும் போது மேலும் புதிய தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்படலாம் என்பதால் அப்பகுதிகளில் ஆய்வை மேற்கொள்வதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. மாறாக தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை சிங்கள பௌத்த அடையாளங்கள் என்று நிறுவும் நோக்கிலேயே குருந்தூர் மலை உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் அகழ்வாராய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

குருந்தூர் மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சிறிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது குருந்தூர் மலைப் பகுதியில் சிங்கள பௌத்த அடையாளங்கள் காணப்படுவதாக நிறுவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வின் போது சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

உண்மையில் குருந்தூர் மலைப் பகுதியில் சிவ வழிபாடு இடம்பெற்றமைக்கும் தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்குமான அடையாளங்களே காணப்படுகின்றன.

உண்மையில் கந்தரோடை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்வுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் அங்கு தமிழ்ப் பிராமி எழுத்துக்களைக் கண்டறிய முடியும். எனவே அங்கு அகழ்வாராய்வுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை. 

மாறாக தமிழர்களின் அடையாளங்கள் காணப்படும் பகுதிகளில் தனிச் சிங்கள தொல் பொருள் ஆய்வாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஆராய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் கொண்ட தொல்பொருள் ஆய்வுக் குழுக்களினால் தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment