நான் பணயக் கைதியாக இருக்கிறேன் - துபாய் ஆட்சியாளரின் மகள் கண்ணீர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

நான் பணயக் கைதியாக இருக்கிறேன் - துபாய் ஆட்சியாளரின் மகள் கண்ணீர்

துபாய் ஆட்சியாளரின் மகள் லத்திபா, பணயக் கைதியாக இருப்பதாகவும், வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருப்பதாகவும் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரக துணை மன்னரும் பிரதமருமான ஷேக் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திபா சுதந்திரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்காக துபாயிலிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 

ஆனால், அவர் பயணம் செய்த ஆடம்பரப் படகு இந்தியா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் மீண்டும் துபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அப்போதில் இருந்தே அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.

இந்நிலையில், லத்திபா தப்பிச் செல்ல முற்பட்டு மீண்டும் துபாய்க்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு வருடத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை பிபிசி வெளியிட்டுள்ளது. அதில், ஒரு வீடியோவில் லத்திபா, குளியலறையின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில் பேசும் அவர், ‘நான் ஒரு பணயக் கைதியாக இங்கே இருக்கிறேன், இந்த வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது’ என்று கூறுகிறார்.

‘வீட்டிற்கு வெளியே ஐந்து ஆண் காவலர்களும், வீட்டிற்கு உள்ளே இரண்டு பெண் காவலர்களும் உள்ளனர். ஒவ்வொரு நாளும் எனது பாதுகாப்பு மற்றும் எனது வாழ்க்கை குறித்து கவலையாக உள்ளது’ என்று லத்திபா கூறுகிறார்.

மற்றொரு வீடியோவில், ‘எனது நிலைமை ஒவ்வொரு நாளும் மிகவும் அவநம்பிக்கையாகவே இருக்கிறது. இந்த சிறை வீட்டில் நான் பணயக் கைதியாக இருக்க விரும்பவில்லை. சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்’ என்று அவர் கூறுகிறார்.

இது வீடியோக்கள் தங்களுக்கும் கிடைத்திருப்பதாக ஸ்கைநியூஸ் நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் கடந்த ஒன்பது மாதங்களாக லத்திபாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது.

லத்திபாவின் நண்பர்கள், அந்த வீடியோக்களை இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad