பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியம், இல்லையேல் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்கிறார் திஸ்ஸ விதாரண - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியம், இல்லையேல் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்கிறார் திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகமாட்டோம். பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளையே தற்போது முன்னெடுக்கிறோம். ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். முரண்பட்டுக் கொண்டால் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தை குறித்து வினவிய போது மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அமைத்துள்ள பிரதான கட்சிகளுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்களை குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்ட கருத்து கூட்டணிக்குள் மாறுப்பட்ட கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக்குள் நிலவும் கருத்து முரண்பாடுகளை கொண்டு நாங்கள் அரசாங்கத்தை விட்டு விலகுவதாக குறிப்பிடப்படுகிறது. பாரிய போராட்டத்திற்கு மத்தியில் நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு எவ்வித அவசியமும் கிடையாது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னின்று செயற்பட்டவர்கள் என்ற ரீதியில் ஒன்றினைந்து செயற்படுவோம்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளது. இதற்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வை காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வை காணாவிடின் கூட்டணிக்குள் முரண்பாடுகளே தொடரும் அதற்கு இடமளிக்க முடியாது.

ஆளும் தரப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையை கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிளை நிறைவேற்ற வேண்டுமாயின் ஆளும் தரப்பினர் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இல்லாவிடின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad