யுத்தம் முடிந்தாலும் நாட்டில் அமைதியும் இயல்பு நிலையும் உருவாகவே இல்லை பதற்றமான சூழலே நீடிக்கிறது : சமத்துவக் கட்சி - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

யுத்தம் முடிந்தாலும் நாட்டில் அமைதியும் இயல்பு நிலையும் உருவாகவே இல்லை பதற்றமான சூழலே நீடிக்கிறது : சமத்துவக் கட்சி

உள், வெளி அழுத்தங்களால் மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகும் நிலை மாற்றப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் நிரந்தர அமைதிச் சூழலை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் பங்களிப்பு அவசியமாகும் என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யுத்தம் முடிந்தாலும் நாட்டில் அமைதியும் இயல்பு நிலையும் உருவாகவே இல்லை. அமைதியின்மையும் நிச்சயமற்ற நிலையும் பதற்றமான சூழலுமே நீடிக்கிறது. சமூக முரண்பாடுகள், இன முரண்பாடுகள் என அரசியல் முரண்பாடுகள் வலுபெற்று கொண்டே செல்கின்றன. உள் - வெளி அழுத்தங்களால் நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.

மக்கள் எதிர்பார்த்த நிம்மதி ஏற்படவில்லை. இதெல்லாம் போதாதென்று வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் மேலும் ஒரு புதிய நெருக்கடி நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கில் தீவகப் பகுதிகளில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மின் உற்பத்தி திட்டமானது பிராந்திய ரீதியான நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளதோடு அங்குள்ள மக்களையும் குழப்பத்திற்குள்ளாக்கியுள்ளது.

இந்தப் பிராந்திய நெருக்கடியானது, எதிர்காலத்தில் இந்தப் பகுதியிலுள்ள கடல் மற்றும் சுற்றாடல் பரப்பில் தொடர் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாகவே அமையும். பூகோள ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இந்தியாவுடன் கொண்டிருக்கும் நட்பையும் உறவையும் இது பாதிக்கும். 

எனவே இதில் அரசாங்கம் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன், வடக்கு கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கும் இங்குள்ள மக்களின் முன்னேற்றத்துக்கும் இந்தியாவின் பங்களிப்புகள் அவசியமானவை.

வரலாற்று ரீதியாக எமது மக்கள் இந்தியாவுடன் கொண்டிருக்கும் பண்பாட்டுறவை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் பங்களிப்புகள் எப்போதும் தேவை என்று குறிப்பிடப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad