ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பிரதமர் மஹிந்த மஹாசங்கத்தினருடன் கலந்துரையாடல் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பிரதமர் மஹிந்த மஹாசங்கத்தினருடன் கலந்துரையாடல்

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று (2021.01.10 ) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை மற்றும் அது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்புமிக்க மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

கொவிட்-19 தொற்று நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய உலக நாடுகளுக்கிடையே இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற நிலையில், எமது நாட்டை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் தவறான கருத்துக்களை உள்ளடக்கி மிக மோசடியான முறையில் இந்த மனித உரிமைகள் திணைக்கள அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் வெற்றிக்கும், இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான 16 விடயங்களை உள்ளடக்கி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இதுபோன்ற தீர்மானமிக்கதொரு தருணத்தில் மரியாதைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்தை பெறுவதற்கு தீர்மானித்தமை குறித்து நான் முதலில் பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சூழ்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பிப்பது பொருத்தமற்றது என்றும், அதற்கு பதிலாக எமது தரப்பு நீதியை எடுத்துரைக்கும் பிரதிவாத அறிக்கையொன்றை மாத்திரம் முன்வைக்க வேண்டும் என வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் நாட்டை பிரிப்பதே என சுட்டிக்காட்டிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போர்க் குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்தார்.

இத்தீர்மானத்திற்கு அமைவான நல்லிணக்கம் மிகவும் ஆபத்தானது என்றும், அத்தகைய உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தில் தேசபற்று சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமானது என்றும் அவர்கள் கூறினர்.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள பௌத்த நாடுகளுக்கு நமது தேரர்களின் ஊடாக சில தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அதனூடாக நேர்மறையான பதிலை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மங்கள சமரவீர அவர்கள் ஒப்புக் கொண்ட 30 (1) தீர்மானம் நாட்டில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்தத் தீர்மானத்தின் விளைவாக பொருளாதாரத் தடைகள், பயணத் தடை மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை உருவாக்கக்கூடும் என்று தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அத்தீர்மானத்திற்கு எதிராக எமக்கு சார்பாக விளங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவது சாதாரண நடைமுறை என்ற போதிலும் இத்தீர்மானத்திற்கமைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஒரு தீர்மானங்களை மேற்கொள்வது நியாயமில்லை எனவும், ஆனால் இந்த தீர்மானத்துடன் நீதி, சட்டம் மற்றும் நேர்மை ஆகின நெருங்கக்கூடவில்லை என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad