21 வருடங்கள் காலதாமதமாகியிருக்கும் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கையை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு கோப் குழு பரிந்துரை - 2016 தொடக்கம் 2019ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

21 வருடங்கள் காலதாமதமாகியிருக்கும் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கையை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு கோப் குழு பரிந்துரை - 2016 தொடக்கம் 2019ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதான பொறுப்புக்களில் ஒன்றான தேசிய கொள்கையை விரைவுபடுத்தும் விடயத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், குறித்த அதிகார சபைக்குச் சொந்தமான கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடந்த 12ஆம் திகதி கூடிய கோப் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுரை வழங்கப்பட்டது.

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுத்தல் மற்றும் அதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதை நோக்காகக் கொண்டு தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காக 1998ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உருவாக்கப்பட்டது. 

எனினும் இந்தத் தேசிய கொள்கைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது 21 வருடங்கள் காலதாமதமடைந்திருப்பதும் இங்கு புலப்பட்டது. 

ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதுடன், அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியது.

குறித்த அதிகார சபையின் 2016, 2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையென்பதும் இங்கு வெளியானது. 

இது தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் குழுவின் தலைவர், இரண்டு மாதங்களுக்குள் அனைத்து அறிக்கைகளையும் அமைச்சின் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோருக்குப் அறிவுறுத்தல் வழங்கினார்.

அத்துடன், அதிகார சபைக்குச் சொந்தமான தகவல் தளமொன்றுக்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கு 2016, 2017ஆம் ஆண்டுகளில் 9 இலட்சம் ரூபா நிதியும், கொழும்பு பல்கலைக்கழக கணினி கல்விப் பிரிவினால் மென்பொருளொன்றை உருவாக்குதற்கு 1.2 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளபோதும் இதுவரை இவற்றினால் உரிய பலனைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதும் இங்கு புலப்பட்டது. 

இதுபோன்ற தகவல் தளமொன்று உருவாக்கப்படுவது அவசியமாக இருந்தாலும், அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்படும்போது உரிய நடைமுறையொன்று இருப்பது அவசியம் என்பதால் இவ்விடயம் குறித்து உடனடியாக உள்ளக விசாரணையொன்றை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோப் குழு, கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியது.

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க பாடசாலை வான் சேவையை ஒழுங்குபடுத்த சட்டக் கட்டமைப்பொன்றை தயாரிப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளபோதும் இதுவரை இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. 

இந்த நோக்குத்துக்குத் தேவையான தரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளபோதும், ஒழுங்கு முறைப்படுத்த அதிகார சபையில் காணப்படும் ஆளனிப் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

தற்பொழுது புதிதாக நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகளின் தகுதிக்கு அமைய அவர்களை சேவைக்கு அமர்த்தி இச்செயற்றிட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் குழு பணிப்புரை விடுத்தது.

அத்துடன், சிவில் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்கு அதிக காலம் எடுக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக கோப் குழு இங்கு சுட்டிக்காட்டியது. 

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பிள்ளைகள் வயது வந்தவர்களாவதற்கு முன்னர் அந்த வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான அவசியம் பற்றியும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக 3165 பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதும் 2392 குழுக்கள் மாத்திரமே செயற்படும் நிலையில் இருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. 

பாடசாலை மாணவர்கள் மத்தியில் இதனை பிரபல்யப்படுத்துவதற்கு மிகவும் கவர்ச்சிகரமான முறையில் இச்செயற்றிட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப நிறுவனத்தில் செயலில் உள்ள திட்டங்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதிகார சபையின் சட்டப் பிரிவில் இருவர் மாத்திரமே பணி புரிவதாகவும், இது நிறுவனத்தின் செயற்பாடுகளுக்குப் போதுமான எண்ணிக்கை இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, அதிகார சபையின் சட்டப் பிரிவைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு, கோப் குழு பரிந்துரைத்தது.

அத்துடன் 2011-2020 காலப்பகுதியில் அதிகார சபையில் 89,405 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 2021.01.31ஆம் திகதி வரையில் தீர்க்கப்படாத முறைப்பாடுகளின் எண்ணிக்கை 40,668 ஆகும் என்பதும் இங்கு தெரியவந்தது. 

முறைப்பாடுகள் தொடர்பில் கண்காணித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவில் ஒரேயொருவர் மாத்திரம் பணியாற்றுவது கவலைக்குரிய விடயம் என்றும், இதற்கமைய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவைப் பலப்படுத்தி கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை விரைவில் முன்னெடுக்குமாறும் கோப் குழு ஆலோசனை வழங்கியது.

இலங்கையில் காணப்படும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உரிய முறையில் ஒழுங்கு முறைப்படுத்துவதன் அவசியம் பற்றி இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான ஆரம்பகட்ட தகவல்களைப் பெற்று நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அதிகார சபைக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள் இருந்தாலும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய தகவல் அடிப்படையொன்று இல்லாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. 

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த தகவல் தளமொன்று அவசியம் என்பதால் அதற்கான தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டது.

நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாட் தொகுதியின் எண்ணிக்கை 548ஆகக் காணப்படுகின்றபோதும் 206 பேருக்கான வெற்றிடம் காணப்படுகிறது. அனுமதியளிக்கப்பட்ட பணியாட் தொகுதியினரை உள்வாங்கும் செற்பாடு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட முடியும் என்பதால் இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வைத் தேடுமாறும் வலியுறுத்தப்பட்டது. 

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் குரலாகவிருக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து இதனை பலப்படுத்துவதற்கான அவசியத்தை கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இங்கு வலியுறுத்தினார். 

இவ்வருடத்தில் மீண்டும் ஒருமுறை அதிகார சபையை கோப் குழுவில் அழைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோப் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, இரான் விக்ரமரட்ன, பிரேம்நாத் சி.தொலவத்த, சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment