உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ISIS தொடர்பு எனத் தெரிவித்து இலங்கையர் மூவருக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ISIS தொடர்பு எனத் தெரிவித்து இலங்கையர் மூவருக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு

கடந்த 2019 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த மொஹமட் நெளபர், மொஹமட் அன்வர் மொஹமட் றிஸ்கான், அஹமட் மில்ஹான் ஹயாத்து மொஹமட் ஆகிய இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களத்தினால் (Department of Justice) பயங்கரவாத குற்றச்சாட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நேற்றையதினம் (08) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த மூவர் மீதும், ISIS தீவிரவாத அமைப்பிற்கு நேரடியாக ஆதரவு வழங்கியமை, சதித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பயங்கரவாத மற்றும் அது சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க நீதி திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்கு அமைய, பிரதிவாதிகள் மூவரும் 'இலங்கையில் ISIS' (ISIS in Sri Lanka) எனும் பெயரிலான ISIS ஆதாரவு குழுவினராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கர்கள் ஐவர் உள்ளிட்ட 268 பேரை கொன்ற, 2019 ஏப்ரல் தாக்குதலுக்கு குறித்த குழுவின் ஒரு பிரிவினரே பொறுப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகளுக்கு விசாரணை ரீதியான உதவியை அமெரிக்க வழங்கியதோடு, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வது தொடர்பில் இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் உதவி வழங்கி வருவதாக, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் வழக்குத் தொடர்ந்துள்ள, இலஙகையிலுள்ள குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான, அக்குற்றங்கள் தொடர்பான விபரங்களை அமெரிக்கா வழங்கி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள், இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு, இலங்கை எடுத்து வரும் முயற்சிகளுக்கு, அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும், இலங்கையுடனான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கான பொது அர்ப்பணிப்பு ஆகியவற்றை அமெரிக்கா பாராட்டுகின்றது, என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment