பாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

பாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது

(செ.தேன்மொழி)

பாணந்துறை வடக்கு பகுதியில் மீனவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் பள்ளிமுல்ல பகுதியில், கடந்த திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் மூவர் பயணித்த முச்சக்கர வண்டியின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கெமுணுமாவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மீனவர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் குழுக்களும், புலனாய்வு பிரிவின் குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்து வந்தது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபருடன் முச்சக்கர வண்டியில் பயணித்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையானது மிகவும் திட்டமிட்ட முறையில் இடம்பெற்றுள்ளதாகவே விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

எனினும் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் கூட்டை நடத்திய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

பொலிஸாரின் விசாரணைகளுக்கமைய சம்பவ இடத்திலிருந்து 4 ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad