வனவளத் திணைக்களம் மக்களின் காணிகளுக்கு எல்லைக்கல் இடுவதில் காட்டும் அவசரத்தினை காணிகளை விடுவிப்பதில் காட்டுவதில்லை - துரைராசா ரவிகரன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

வனவளத் திணைக்களம் மக்களின் காணிகளுக்கு எல்லைக்கல் இடுவதில் காட்டும் அவசரத்தினை காணிகளை விடுவிப்பதில் காட்டுவதில்லை - துரைராசா ரவிகரன்

வனவளத் திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளுக்கு எல்லைக் கற்களை இட்டு, அக்காணிகளை அபகரிப்பதில் காட்டுகின்ற அவசரத்தினை, எல்லைக் கற்களை அகற்றி மக்களுக்கு காணிகளை விடுவிப்பதில் காணமுடியவில்லை என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (26.01.2021) இடம்பெற்ற நிலையில், அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வனவளத் திணைக்களம் காணிகளுக்கு எல்லைக்கற்களை இடும்போது பிரதேச செயலகத்திடமிருந்து பெரும்பாலும் அனுமதிகளைப் பெறுவதில்லை. அத்தோடு காணிகள் தொடர்பில் பொதுமக்களிடமோ, கிராம அலுவலர்களிடமும் ஆராய்வதில்லை.

ஒருமுறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில், வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கும்போது, 2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தம்மால் 15,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளுக்கு எல்லைக் கற்களை இட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக வனவளத் திணைக்களம் எல்லைக் கற்களை இட்டுள்ள அத்தனை காணிகளும் எமது தமிழ் மக்கள் பயன்படுத்திய காணிகளாகும்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கொக்குளாய், கொக்குத் தொடுவாய், ஒதியமலை போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கடந்த 30 வருட காலங்களுக்கு மேலாக தமது இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து வெளியிடங்களில் குடியேறியிருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதிகளில் வாழ்ந்த எமது மக்களின் காணிகள் காடுகளாக காட்சி தருகின்றன. குறித்த தமிழ் மக்களுக்குரிய காணிகளுக்கு தற்போது வனவளத் திணைக்களம் தனது எல்லைக் கற்களையிட்டுள்ளது.

இவ்வாறு நிலைமைகள் இருக்கும்போது வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய காணிகளுக்கு எல்லைகளை இடும்போது, பிரதேச செயலரிடமோ, கிராம சேவகர்களிடமோ அல்லது காணிகளுக்குரிய மக்களிடமோ அனுமதிகளைப் பெற்றார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய காணிகளுக்கு எல்லைக் கற்களை இடும்போது காட்டும் அக்கறையினையும் வேகத்தினையும், எல்லைக் கற்களை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதில் காணமுடியவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad