அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து உறுதியானதொரு முன்மொழிவை விரைவில் முன்வைக்க வேண்டும் - வேலுகுமார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து உறுதியானதொரு முன்மொழிவை விரைவில் முன்வைக்க வேண்டும் - வேலுகுமார் எம்.பி.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்க தரப்புகளில் இருந்து இன்னும் காத்திரமானதொரு வரைவுநகல் முன்வைக்கப்படவில்லை. எனவே, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து உறுதியானதொரு முன்மொழிவை விரைவில் முன்வைக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.

கண்டி மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் பிரச்சினை என்பது உச்சகட்டத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம் உத்தேச சம்பள முன்மொழிவு திட்டத்தை சமர்ப்பித்து, அதனை சந்தைப்படுத்திவருகின்றது. ஆயிரம் ரூபாவுக்கு மேல் வழங்குவதற்கு தயார் என்ற தொனியில்கூட பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தொழிற்சங்கங்கள் தமது தரப்பு திட்டத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. எவ்வாறு, எப்படி, எவ்வளவு சம்பள உயர்வை வழங்கலாம் என்பதற்கான சூத்திரம் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை முன்னிலைப்படுத்தியே பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்க வேண்டும். அதனைவிடுத்து ஆயிரம் வேண்டும் என வாய்வார்த்தையில் மட்டும் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

மறுபுறத்தில் அரசாங்கமும் ஆயிரம் குறித்து கதைக்கின்றதேதவிர தமது உறுதியான - இறுதியான திட்டத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இதனால் சம்பள உயர்வுக்கான சமரில் கம்பனிகளே முன்னிலை வகிக்கின்றன. தொழிற்சங்கங்கள் பலவீனமான கட்டத்தில்தான் உள்ளன என்பது புலப்படுகின்றது. இதுவே கம்பனிகளுக்கு ஏதோவொரு விதத்தில் பலமாக அமையும்.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபடவேண்டும். ஒரு மேசையில் அமர்ந்து பொதுவான – காத்திரமானதொரு சம்பள முன்மொழிவு திட்டத்தை உடன் தயாரிக்கவேண்டும். அதனைவிடுத்து ஒவ்வொரு தரப்பும் வெவ்வேறான அறிவிப்புகளை விடுப்பதும் கம்பனிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும்.

அதேவேளை, சம்பள உயர்வு குறித்து கவனம் செலுத்து நிலையில், தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதிலும் விழிப்பாக இருக்கவேண்டும்.” என்றார்.

No comments:

Post a Comment