உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கொரோனா கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது என்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கொரோனா கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது என்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கொவிட்-19 வைரஸ் கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக செயற்படுத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் பாரிய பங்களிப்பு செலுத்துகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலாத்துறை சேவையில் 30 இலட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுப்பட்டுள்ளார்கள். இவர்களின் வாழ்க்கைத்தரம் பல வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி வரை உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் 1,004 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள், இவர்களில் 3 பேர் மாத்திரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இவர்களும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பிரயாணிகளினால் கொவிட்-19 கொத்தணி ஒருபோதும் தோற்றம் பெறாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனைவருக்கும் பொதுவானது. சுற்றுலாப் பிரயாணிகளுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் இவ்விடயத்தில் வழங்கப்படவில்லை. ஆகவே உக்ரைன் பயணிகள் குறித்து எதிர்த்தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் பொய்யானது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின், சுற்றுலாத் துறையினை நெருக்கடியான நிலையில் ஆரம்பிக்க வேண்டும். குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் அபிவிருத்தி செய்யப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எழுந்துள்ள சவால்களை வெற்றி கொள்வது கட்டாயமாகும் என்றார்.

No comments:

Post a Comment