மது மற்றும் புகைப்பிடித்தலை மூன்று மாதங்களுக்கு தவிர்த்துக் கொள்ளவும் - டொக்டர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

மது மற்றும் புகைப்பிடித்தலை மூன்று மாதங்களுக்கு தவிர்த்துக் கொள்ளவும் - டொக்டர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ வேண்டுகோள்

கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும் சூழலில் மது மற்றும் புகைப்பிடித்தலை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனையானது கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தின் செயற்றிறனை உடலில் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தின் முதற்தொகுதி நாளை 27 ஆம் திகதி இலங்கைக்கு வந்து சேரவிருப்பதோடு மறுநாள் தொடக்கம் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது. இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தை நாட்டுக்கு தருவிக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட சம்பந்தப்பட்ட சகலருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் நிலவும் சூழலில் புகைப்பிடித்தலும் மதுப்பாவனையும் உடலாரோக்கியத்திற்கு உகப்பானவை அல்ல. அதனால் தான் சிகரெட் பாவனையை குறைந்தது ஒரு வருடத்திற்காகவது தடை செய்யுமாறும் மது விற்பனை நிலையங்களையும் குறைந்தது ஒரு வருடத்திற்காவது மூடிவிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

ஏனெனில் புகைப்பிடித்தலும் மதுப்பாவனையும் மனிதனின் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடியதாகும். குறிப்பாக மதுப்பாவனை ஈரலின் செயற்பாட்டில் பலவீனங்களை ஏற்படுத்தும். புகைப்பிடித்தலும் மதுப்பாவைனயும் மூளையின் ஞாபக சக்திக்கான கலங்களின் செயற்பாட்டையும் பலவீனப்படுத்தும். இவை கொவிட் 19 தொற்றின் தாக்கம் தீவிரமாக அமைய வாய்ப்பாக இருக்கும்.

அதனால்தான் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் நிலவும் சூழலில் நோயெதிர்ப்பு சக்தி பலமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. அதேநேரம் இத்தொற்றைத் தவிர்ப்பதற்கான தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்பவர்களும் பலமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பது அவசியம்.

அதன் காரணத்தினால் கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும் சூழலில் மதுப்பாவனை மற்றும் புகைப்பிடித்தலை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் இத்தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கப்படும் பிரதிபலனை இப்பழக்கங்களைக் கொண்டிருப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மர்லின் மரிக்கார்

No comments:

Post a Comment