பெப்ரவரியில் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெறாவிடின் கடும் போராட்டங்களை முன்னெடுப்போம் - கூட்டு ஒப்பந்தம் இடையூறாக இருந்தால் அதிலிருந்து விலகவும் தயாராக உள்ளோம் : வடிவேல் சுரேஸ் - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

பெப்ரவரியில் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெறாவிடின் கடும் போராட்டங்களை முன்னெடுப்போம் - கூட்டு ஒப்பந்தம் இடையூறாக இருந்தால் அதிலிருந்து விலகவும் தயாராக உள்ளோம் : வடிவேல் சுரேஸ்

(செ.தேன்மொழி)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தி, மலையகத்தின் பூர்வீக இன பரம்பலை சிதைத்துவிட அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், பெப்ரவரி 10 ஆம் திகதி அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெறாவிடின் கடும் போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் எச்சரித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு எச்சரித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. அதற்கமைய நிதி அமைச்சராக செயற்பட்டு வரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இவ்வருடத்திற்காக முன்வைக்கப்பட்ட வரவு செலுவுத் திட்டத்தில், இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் 1000 ரூபா சம்பளவுயர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள தினமாகும், அன்றைய தினமாவது அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். இல்லை எனில் நாம் பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்.

இந்த சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தி மலையகத்தின் பூர்வீக இன பரம்பலை சிதைத்து விடுவதற்கு அனுமளிக்கக்கூடாது. ஆயிரம் ரூபாய்தான் மலையக மக்களின் வாழ்க்கை என்றும் எண்ண வேண்டாம். அவர்களின் தொழிலுக்கான ஊதியத்தையே அவர்கள் கேட்கின்றனர்.

இந்நிலையில் 1000 ரூபாவை முன்னிலைப்படுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்களை ஒருவரும் மட்டந்தட்டக்கூடாது. எமது தொழிலாளர்கள் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு இடையூறுகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர். தற்போது கம்பனிகாரர்கள் மற்றும் பெரும்பானமையினங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மலையகத்தில் தற்போது காணி சுவிகரிப்புகள் அதிகரித்து வருகின்றன.

மலையக தொழிற் சங்கங்களுக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், முதலாளிமார்கள் எமது தொழிலாளர்களின் சேமலாப நிதியின் ஒரு தொகையையும் சம்பளத்துடன் இணைத்து ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் சம்பளத்தை வழங்க முடியும் என்று காண்பித்தனர்.

இதன்போதும் நாம் முன்வைத்த பல கோரிக்கைகளுக்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்காமையின் காரணமாகவே, கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்திருந்தது. இந்த செயற்பாடுகளுக்கு கூட்டு ஒப்பந்தம் ஒரு இடையூறாக இருந்தால் அதிலிருந்து விலகவும் நாம் தயாராகவே உள்ளோம். கூட்டு ஒப்பந்தத்தை பலரும் விமர்சிக்கலாம். ஆனால் அதில் பல நன்மைதரும் விடயங்களும் உள்ளடங்குகின்றன.

கம்பனிகள் 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக குறிப்பிட்டு, தொழிலாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை வழங்கவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறாத வகையில் 1000 ரூபாய் வழங்குவதுடன், அது அடிப்படை சம்பளமாகவே வழங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் என்ற போர்வையில் பெருந்தோட்ட காணிகளை கொலனிகளாக மாற்றும் முயற்சியும் காணப்படுகின்றது. அதனால் அத்தகைய செயற்பாடுகளை கைவிடுமாறும் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்படுமோ என்ற கேள்வி எமக்கு எழுந்துள்ளது. மாகாண சபை முறையானது சிறுபான்மையினருக்கு நன்மையைளிக்கும் முகமாக கொண்டுவரப்பட்டதாகவும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை முறையை இல்லாதொழிப்பதற்கு நாம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்க மாட்டோம். அதனால் 13 பிளஷ் ஆகா கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad