நாட்டின் பொருளாதாரத்தினை சிறப்பாக முகாமை செய்வோம், எதிர்க்கட்சிகள் வெவ்வேறு நிலைமைகளில் பொய்யான பிரசாரங்கள் என்கிறார் அஜித் நிவாட் கப்ரால் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

நாட்டின் பொருளாதாரத்தினை சிறப்பாக முகாமை செய்வோம், எதிர்க்கட்சிகள் வெவ்வேறு நிலைமைகளில் பொய்யான பிரசாரங்கள் என்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

(ஆர்.ராம்)

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது விட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தினை சிறப்பாக முகாமை செய்வதற்குரிய மூலோபாயங்களை கொண்டிருப்பதாக நிதி, மூலதனச்சந்தை, பொது முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு சுபீட்சமாக ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கும் அதேநேரம், அரசாங்கத்தின் செயற்றிறன்களைக் கண்டு அஞ்சுவதாலேயே எதிர்க்கட்சிகள் பொய்பிரசாரங்களைமேற்கொண்டு வருதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலா விமான சேவைகள் அமைச்சர் பிரசன்னா ரணதுங்கவுக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது ‘ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வரிச் சலுகையான ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத அணுகுமுறைகளால் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மீளப் பெறப்படும் அபாயம் இருப்பாதாகவும் இதனால் நாட்டில் வறுமை அதிக்கும் நிலைமை ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியில் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பிளஸ். வரிச்சலுகையை தொடர்ந்தும் நீடித்து வைத்திருப்பது தொடர்பில் நாம் அதிகளவு கரிசணை கொண்டிருக்கின்றோம். அது சம்பந்தமான பேச்சுக்களையும் முன்னெடுக்கின்றோம். எனினும் அந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடமே தீர்மானம் தங்கியுள்ளது.

ஆகவே ஜி.எஸ்.பி.பிளஸ். வரிச்சலுகை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தினை சுமூகமாக பேணுவதற்குரிய அனைத்து செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

விசேடமாக உள்நாட்டு உற்பத்திகள், முதலீடுகள், சுற்றுலாத்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை இந்த ஆண்டில் கணிசமான அளவில் முன்னெடுப்பதற்குரிய திட்டமிடல்கள் எம்மிடமுள்ளன.

விசேடமாக கூறுவதாயின், கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம், அம்பாந்தோட்டையில் உள்ள கைத்தொழில் பேட்டையில் முதலீடுகள் களுத்துறை ரயர் உற்பத்திசாலை உள்ளிட்ட ஏனைய கைத்தொழில் நிலையங்களை இயங்க வைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் நடைபெறவுள்ளன.

கொரோனா வைரஸ் நெருக்கடியானது உலகத்திற்கே பொதுப்படையானதொரு விடயம். அதனைக் காரணம் காட்டி நாட்டின் ஸ்திரமான பொருளாதார நிலைமைகளை கட்டியெழுப்புவதில் பிற்போக்காகச் செயற்பட முடியாது.

ஆகவே கொரோனா சவாலுக்கு சிறப்பாக முகங்கொடுக்கும் அதேநேரம், நாட்டின் பொருளாதாரத்தினை மீளமைக்கும் குறுங்கால, நீண்டகால திட்டங்களையும் முன்னெடுக்கின்றோம்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் வெறுமனே வார்த்தைகளைத் தாண்டி கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து திட்டமிட்ட அதன் இலக்குகளை அடைந்துவருவதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியானது வெவ்வேறு நிலைமைகளில் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றது. அதில் ஒன்றுதான் ஜி.எஸ்.பி.வரிச்சலுகை விடயமாகும். 

அதேபோன்று மற்றொரு தரப்பினர் இலங்கை ரூபாவின் பெறுமதி இழப்பு ஏற்படுமென்றும் அடுத்து வரும் நாட்களில் டொலரொன்றுக்கான ரூபாவின் பெறுமதி 250 வரையில் வீழ்ச்சி காணும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இவை அனைத்துமே மக்களை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளும் அரசியல் ரீதியான பிரசாரங்களாகும். அரசாங்கம், ரூபாவை முகாமை செய்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நிறைவான திட்டமிடல்களுடன் முன்னெடுத்து வருகின்றது. 2021 முழு இலங்கையர்களுக்கும் சுபீட்சமான ஆண்டாக மாற்றுவதே எமது நோக்கமாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad