பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே பாடசாலைகள் மீள ஆரம்பம், சுகாதார நிலைமைகள் பூரண கட்டுப்பாட்டில் என்கிறார் கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே பாடசாலைகள் மீள ஆரம்பம், சுகாதார நிலைமைகள் பூரண கட்டுப்பாட்டில் என்கிறார் கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே முழுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நேற்றைய தினம் இரண்டாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் நேற்று தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுகாதார நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பே பாடசாலைகளை திறப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் நேற்று முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டன.

அதேவேளை, எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய அனைத்து பாடசாலைகளும் பதினோராம் வகுப்பு கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள கல்வியமைச்சர் இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. மிகுந்த அவதானத்துடன் நாம் தயாரித்த திட்டத்திற்கு அமையவே பாடசாலைகள் திறக்கப்பட்டன. அதுமட்டுமன்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என ஆராய்வதற்கும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கிணங்க அனைத்து பாடசாலைகளிலும் அதிபரின் தலைமையில் பாடசாலை குழு, பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை அதிகாரிகள், பொலிஸ் பரிசோதகர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் அந்த நடவடிக்கை குழுவில் இடம்பெறுகின்றனர்.

மேற்படி குழுவுக்கு பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த பொறுப்புகள் முறையாக நிறைவேற்றப் படுகின்றனவா என்பதை நாம் அடிக்கடி ஆராய உள்ளோம்.

அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களும் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர். 

அது தொடர்பில் கல்வியமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கும் அறிவித்திருந்தது.

செயற்பாடுகளில் எந்த குறைபாடுகளும் இல்லாத வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த புதன்கிழமை முதல் பாடசாலைகளில் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களின் போக்கு வரத்து தொடர்பில் கல்வியமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. அதற்கிணங்க இலங்கை போக்கு வரத்து சபை, ரயில்வே திணைக்களம், பாடசாலை வான் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட போக்கு வரத்து துறையின் அனைத்து அதிகாரிகளும் கல்வி அமைச்சின் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி உரிமையை பெற்றுக் கொடுக்கும் வகையில் மிகுந்த சவாலுக்கு மத்தியில் மேற்படி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment