உருவாக்கும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களை ஒதுக்கிவிட வேண்டாம் - கொவிட் வைரஸ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மன ரீதியிலான உளைச்சலை கொடுத்துள்ளது : சித்தார்த்தன் - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

உருவாக்கும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களை ஒதுக்கிவிட வேண்டாம் - கொவிட் வைரஸ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மன ரீதியிலான உளைச்சலை கொடுத்துள்ளது : சித்தார்த்தன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியல் அமைப்பில் தமிழர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை 13 ஆம் திருத்தமேயாகும். அதனை நீக்கிவிட்டால் நாம் அமைதியாக இருந்தாலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 

அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்தால் அதில் தமிழ் மக்களை ஒதுக்கிவிடாது வருங்காலத்தில் இந்த நாடு அமைதியானதும், சிறந்த நாடாக உருவாக்கும் திட்டத்தில் கையாள வேண்டும் அதற்கான ஆதரவை நாமும் தருவோம் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் தற்போதைய கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் மக்கள் அனைவரையும் பாதித்தாலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இது மன ரீதியிலான உளைச்சலை கொடுத்துக் கொண்டுள்ளது. ஜனசாக்கள் தகனம் செய்யப்படுவது அவர்களின் மத நம்பிக்கைகளை முறியடிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். நாட்டில் சகல பகுதியிலும் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவே நினைகின்றேன். ஐக்கிய நாடுகள் சபை வரையில் இதனை எடுத்து செல்வதாக கூறுகின்றனர்.

எமது தமிழ் மக்களின் போராட்டங்களும் ஆரம்பத்தில் சாத்வீக ரீதியில் முன்னெடுக்கப்பட்டு தீர்வை எட்டவே முயற்சிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா கொண்டுவந்த தனி சிங்கள சட்டத்தை எதிர்த்து 1957 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து அப்போதைய சிங்கள பெளத்தர்கள் நாடு பூராகவும் கலவரத்தை உருவாக்கினர். அதற்கு அஞ்சிய பண்டாரநாயக்கா அவர்கள் ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தமையே அடுத்த யுத்தம் ஒன்று இடம்பெற காரணமாக அமைந்தது. அது நடந்திருக்காது போயிருந்தால் ஆயுத போராட்டம் ஒன்று உருவாகி மிகப்பெரிய அழிவும் ஏற்பட்டிருக்காது.

இவை இடம்பெற்ற பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டு மாகாண சபைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டது, இன்று அதனையும் இல்லாது செய்ய வேண்டும் என்ற கோசம் தெற்கில் இருந்து எழுந்துகொண்டுள்ளது. அது ஒரு வெள்ளை யானை அதனை கட்டிக்காப்பது வீண் என கூறப்படுகின்றது. 

இவ்வாறு முரண்பட அரசாங்கமே காரணம். அதிகாரம் பரவலாக்கல் செய்துவிட்டு அதற்கான அமைச்சினை உருவாக்கியமையே இந்த நெருக்கடிக்கு காரணம். அதிகார பரவலாக்கலை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இந்த பிரச்சினைகள் எதுவமே ஏற்படாது. 13 ஆம் திருத்தத்தை உள்ளடக்கி அதிகார பரவலாக்கலை செய்ய வேண்டும் என இந்திய வெளிவுயர்வு அமைச்சர் தெளிவாக கூறினார்.

ஆகவே 13 ஆம் திருத்தத்தை இல்லாது செய்வதன் மூலம் என்னவாகும் என்றால், இப்போது நாம் அமைதியாக இருக்கலாம், ஆயுத போராட்டம் ஒன்று இனி உருவாவதை நாம் எவருமே விரும்பவில்லை, ஆனால் இளைஞர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை உருவாக்கப் போகின்றீர்கள். அரசியல் அமைப்பிலே எமக்கென இருக்கக்கூடிய ஒரேயொரு விடயம் 13 ஆம் திருத்தமே. அதனை நீக்கினால் என்ன செய்வது.

மேலும் அரசியல் அமைப்பு மாற்றத்துக்கான பரிந்துரைகள் கேட்கப்பட்ட வேளையில் நாம் நியாயமான பிரேரணையை முன்வைத்துள்ளோம். அரசியல் அமைப்பு உருவாக்கம் இடம்பெறும் என நான் நம்பவில்லை ஆனால் கடமையை சரியாக செய்துள்ளோம். 

1972,78 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புகளை பார்த்தல் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான பலத்துடன் தமிழர்களின் கோரிக்கைகளை நிரகாரித்து தாங்களாக ஒரு திட்டத்தை கொண்டுவந்தனர். 

எனவே அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்தால் அதில் தமிழ் மக்களை ஒதுக்கிவிடாது வருங்காலத்தில் இந்த நாடு அமைதியானதும், சிறந்த நாடாக உருவாக்கும் திட்டத்தில் கையாள வேண்டும் அதற்கான ஆதரவை நாமும் தருவோம் என்றார்.

No comments:

Post a Comment