ரயில் சேவைகள் அனைத்தும் பெப்ரவரி முதல் ஆரம்பம், பயணிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - ரயில்வே திணைக்களம் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

ரயில் சேவைகள் அனைத்தும் பெப்ரவரி முதல் ஆரம்பம், பயணிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - ரயில்வே திணைக்களம்

(இராஜதுரை ஹஷான்)

தூர பிரதேச ரயில் சேவை உட்பட ரயில் சேவைகள் அனைத்தும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய மீண்டும் ஆரம்பிக்கப்படும், ரயில் போக்கு வரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பயணிகள் அச்சம் கொள்ளாமல் ரயில் சேவையினை பயன்படுத்தலாம் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பிரனாந்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தூர பிரதேச ரயில் சேவை உட்பட ரயில் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. கொவிட்-19 வைரஸ் பரவல் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட வேளையிலும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஈடுப்படுத்தப்பட்டன.

தூரபிரதேச ரயில் சேவையினை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார தரப்பினருடன் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அனைத்து ரயில் நிலையங்களினதும் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை சுகாதார தரப்பினர் ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து தூர பிரதே ரயில் சேவையை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் ரயில் சேவையில் முறையாக பின்பற்றப்படுகின்றன. ரயில் பயணத்தில் ஈடுபட முன்னரும், சேவையில் ஈடுபட்ட பின்னரும் கிருமி தொற்று நீக்கல் செய்யப்படுகிறது. ஆகவே ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad