ஜனாதிபதி கோத்தாபயவின் புதிய ஆணைக்குழு மீது நம்பிக்கை வைப்பது ஐ.நாவின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் பலவீனமாக்கும் : சர்வதேச உண்மை, நீதிக்கான செயற்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

ஜனாதிபதி கோத்தாபயவின் புதிய ஆணைக்குழு மீது நம்பிக்கை வைப்பது ஐ.நாவின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் பலவீனமாக்கும் : சர்வதேச உண்மை, நீதிக்கான செயற்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர்

(நா.தனுஜா)

இலங்கையில் மிகவும் மோசமான சர்வதேச குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்வதற்கு மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிப்பதென்பது கேலிக்கூத்தான விடயமாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புதிய ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை வைப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் பலவீனமானதாக்கும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்கும் செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது நாட்டில் உண்மையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை கடந்த கால விசாரணைகள், ஆணைக்குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றுமொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் கீழ் மீள் இணக்கப்பாடு மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜெனிவாவில் அடுத்த மாதம் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இலங்கையில் மிகவும் மோசமான சர்வதேச குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்வதற்கு இன்னுமொரு ஆணைக்குழுவை நியமிப்பதென்பது மிகவும் கேலிக்கூத்தான விடயமாகும்.

கடந்த கால ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புக்கள் என்னவென்பதையும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டனவா என்பதையும் ஆராயுமாறு ஜனாதிபதி புதிய ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை சாதாரணமாக மீள்பார்வை செய்ய வேண்டிய அதேவேளை, கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் கண்டறியப்பட்டவற்றை ஆராய்வதற்கு ஒரு புதிய ஆணைக்குழுவை உருவாக்குவதென்பது கேலிக்கூத்தானதாகும்.

மேற்படி ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் பெருமளவிற்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாக உள்ளது. 

இலங்கையில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் தமது சொந்த மக்களுக்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தவறி விட்டார்கள்.

இந்நிலையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவைப் பொறுத்தவரை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுடன் விதிமுறைகளும் தெளிவற்றவையாகவே காணப்படுகின்றன.

போர்க் குற்றங்கள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஒருவராலேயே தற்போது இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த புதிய குழுவிற்குத் தலைமை தாங்கும் நீதிபதி, மனித உரிமை மீறல்கள் குற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட ஐ.நா அறிக்கைகளுக்கு எதிராகப் பகிரங்கமாக வாதாடியிருக்கின்றார்.

அவரால் இதனை நடுநிலைமையான முறையில் விசாரணை செய்ய முடியாது. அதுமாத்திரமன்றி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டத்தரணியாகவும் செயற்படுவதாக விமர்சிக்கப்படும் அவர், சட்டமா அதிபர் திணைக்களத்திலும் அங்கம் வகிக்கின்றார்.

இந்த ஆணைக்குழுவானது தெளிவற்றதும் நேரத்தை வீணடிக்கும் வகையிலானதும் மாத்திரமே ஆகும். மாறாக அதன் மீது நம்பிக்கை வைத்தால், அது ஐக்கிய நாடுகள் சபையின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் பலவீனமானதாக மாற்றும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment