அமெரிக்காவில் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

அமெரிக்காவில் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த பெண் லிசா மோன்ட்கோமெரி. இவர் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கிட்மோர் நகரில் வசித்து வந்த 23 வயதான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணியின் வீட்டுக்கு சென்றார். 

எலியை வேட்டையாடும் பூனையை தத்தெடுப்பதற்காக சென்ற லிசா 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த ஸ்டின்னெட்டின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் கத்தியால், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருப்பையில் இருந்த குழந்தையை எடுத்தார். 

இந்த வழக்கில் கடந்த 2007ம் ஆண்டு லிசாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது குழந்தை இல்லாத லிசா வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து, தன்னுடையதாகக் காட்டிக்கொள்ள முயன்றதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இதை அவர் சுயநினைவில்லாத நிலையில்தான் செய்ததாக அவரது சட்டத்தரணி வாதிட்டார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் குற்றவாளி என்று அறிவித்து அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.

52 வயதான லிசா மோன்ட்கோமெரி என்ற குறித்த குற்றவாளிக்கு புதன்கிழமை அதிகாலை 1.31 மணியளவில் இன்டியானாவின் டெர்ரே ஹாட்டில் உள்ள பெடரல் சிறை வளாகத்தில் விஷ ஊசி ஏற்றி நீதிமன்ற உத்தரவின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1953ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்து, நிறைவேற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad