அரசாங்கம் மிக மோசமாக வன அழிப்புகளை மேற்கொண்டுள்ளது - இயற்கை அனர்த்தங்களால் பத்து ஆண்டுகளில் ஒன்றரை கோடி பேர் பாதிப்பு : அனுரகுமார - News View

Breaking

Post Top Ad

Monday, December 7, 2020

அரசாங்கம் மிக மோசமாக வன அழிப்புகளை மேற்கொண்டுள்ளது - இயற்கை அனர்த்தங்களால் பத்து ஆண்டுகளில் ஒன்றரை கோடி பேர் பாதிப்பு : அனுரகுமார

(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்) 

வளங்களையும், வனங்களையும் பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தமது ஒரு ஆண்டு கால ஆட்சியிலேயே மிக மோசமான வன அழிப்புகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும், வெள்ளப் பெருக்கு, மண் சரிவுகள், வறட்சி ஆகிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் அமைச்சுக்கள் மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் வளங்களையும் வனங்களையும் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு இந்த ஒரு ஆண்டு காலத்தில் அரசாங்கம் மிக மோசமாக வன அழிப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது. 

2010 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் வெள்ளப் பெருக்கு காரணமாக 73 இலட்சத்து 97 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த அனர்த்தங்களில் 734 பேர் உயிரிழந்துள்ளனர். வறட்சியின் காரணமாக 75 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யானை - மனித முரண்பாடுகள் காரணமாகவும் பல உயிர்கள் பலியாகியுள்ளது. 

எனவே இயற்கை தன்மைகளை சற்றும் பொருட்படுத்தாது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது. வெறுமனே பணத்தை இலக்கு வைத்த சமூகமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு பணம் மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றது. நாம் அன்றாடம் எமது வாழ்வுக்காக பயன்படுத்தும் அனைத்துமே மத்திய மலைநாட்டில் இருந்தே வருகின்றது. ஆனால் மத்திய மலைநாட்டின் இயற்கையை பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. 

எமது நாட்டின் சுவாசம் மலையகமாகும். இதுவரை எம்மை ஆண்டவர் தொடக்கம் எமது மூதாதையர்கள் எவருமே மலையகத்தை நாசமாக்காது பாதுகாத்தனர். பூமியின் ஐந்தில் ஒரு பங்கு எமது மலையகத்தின் இயற்கை வளங்களில் தங்கியுள்ளது. ஆனால் கடந்த சில காலமாகவே தவறான அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு மலையகம் அழிக்கப்பட்டு வருகின்றது. 

எமது நாட்டின் வளங்கள் இங்கு வாழும் மக்களுக்கு தாராளமாக போதுமானதாகும், ஆனால் ஒரு சில நப்பாசை பிடித்த அதிகார மிருகங்கள் இங்குள்ள வளங்களை நாசமாக்கி விற்று அழித்து வருகின்றது. எனவே இப்போது எமது கொள்கையை மாற்றியாக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad