ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஸ்கைப் வழியாக சாட்சியம் வழங்குகிறார் ரிஷாத் பதியுதீன் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஸ்கைப் வழியாக சாட்சியம் வழங்குகிறார் ரிஷாத் பதியுதீன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஸ்கைப் வழியாக இன்று (19) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சாட்சியமளிக்கவுள்ளார்.

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளின் தொடக்கத்தில், ரிஷாத் பதியுதீனுக்காக ஆஜரான சட்டத்தரணி ருஷ்டி ஹபீப், தனது சாட்சியங்களை தமிழ் மொழியில் வழிநடத்துமாறு தனது வாடிக்கையாளர் கோரியதாக ஆணைக்குழுவுக்குத் தெரிவித்தார்.

இருப்பினும், ஆணைக்குழுவின் தலைவர், ரிஷாத் பதியுதீன் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுக்கு சிங்கள மொழியில் அறிக்கை அளித்ததாக அறிவித்தார்.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சிங்களத்தில் ரிஷாத் பதியுதீன் சாட்சியம் அளித்ததாக ஆணைக்குழு ருஷ்டி ஹபீப்பிற்கு அறிவித்தது.

மொழி பெயர்ப்பாளர் நோய் காரணமாக இன்று கடமைக்கு சமுகமளிக்கவில்லை என்பதால், சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் சாட்சியங்களை வழங்குமாறு ஆணைக்குழு சாட்சிகளுக்கு அறிவுறுத்தியது. தேவைப்படும்போது சில தமிழ் சொற்களைப் பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்று ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

எவ்வாறாயினும், தனது தாய்மொழியான தமிழில் சாட்சியமளிக்க ஜனநாயக உரிமை இருப்பதாகவும் சிங்களத்தில் சாட்சியங்களை வழங்கும்போது சில விடயங்களை சரியாக விளக்குவது கடினம் என்றும் ரிஷாத் கூறினார்.

அதன்படி, மதியம் 1.30 மணிக்கு மதிய உணவு இடைவேளையின் பின்னர் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் மூலம் தமிழில் சாட்சியங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஆணைக்குழு அறிவித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad