வை.எம்.எம்.ஏ. யின் தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் கீழ் இன மத பேதமற்ற இரத்ததான நிகழ்வு - நுவரெலியாவில் சஹீத் எம். ரிஸ்மி பெருமிதம் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

வை.எம்.எம்.ஏ. யின் தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் கீழ் இன மத பேதமற்ற இரத்ததான நிகழ்வு - நுவரெலியாவில் சஹீத் எம். ரிஸ்மி பெருமிதம்

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக, நாட்டில் சமூக, சுகாதார மற்றும் பொருளாதாரம் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் அச்சப்படுகின்றனர். 

இதேவேளை, தொற்றா நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த (குருதித்) தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறான தருணத்தில், இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது கடினம் என்பதால், தேசிய இரத்த வங்கி இரத்தம் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றது. 

இதனைக் கருத்திற் கொண்டு, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் "நாட்டைக் கட்டி எழுப்பும் செயற்திட்டத்தின்" (YMMA Nation Building Project) ஒரு அங்கமான இரத்த தான முகாம்கள், நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. 

இது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இதனால் மக்கள் அதிகளவிலான நன்மைகளையும் பெற்றுவருவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்தார்.

வை.எம்.எம்.ஏ. யின் "தேசத்தைக் கட்டியெழுப்புதல்" எனும் செயற்திட்டத்திட்டத்தின் கீழ், நுவரெலிய வை.எம்.எம்.ஏ. யின் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீமின் வரவேற்புரையுடன் நுவரெலியாவின் நான்காவது இரத்ததான முகாம், நுவரெலிய மாவட்ட செயலகத்தில் (21) சனிக்கிழமை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே, தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, நுவரெலிய மாவட்டத்தில் வை.எம்.எம்.ஏ. பொரகஸ் கிளையின் ஏற்பாட்டில், இவ்வாறான இரத்ததான முகாம் ஒன்று நவம்பர் மாத முற்பகுதியில் நடாத்தப்பட்டது. இதில் நானும் பங்கேற்று, பல்வேறு அறிவுறுத்தல்களிலான வழிகாட்டல்களையும் முன்னெடுத்துச் சென்றேன். 

அத்துடன், கொழும்பு, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் ஏற்கனவே இரத்ததான முகாம்கள் நடாத்தப்பட்டுள்ளன. மேலும், டிசம்பர் மாதம் கண்டி மாவட்டத்தில் மடவளை வை.எம்.எம்.ஏ. யும், களுத்துறை மாவட்டத்தில் எழுவில வை.எம்.எம்.ஏ. யும் இதுபோன்ற இரத்ததான நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. 

இன்றைய எமது நிகழ்வானது, அனைத்து மதத் தலைவர்களின் பிரார்த்தனை களோடு இனிதே ஆரம்பிக்கப்பட்டது என்பதோடு, இதில் எதுவித இன மத பேதங்களுமின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தமையையும் இங்கு பெருமிதத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றென் என்றார்.

இந்நிகழ்வில், கலாநிதி லலித் சில்வா, நுவரெலிய மாவட்டச் செயலாளர் கே.பி.ஆர். புஷ்பகுமார, நுவரெலிய மாநகர சபை உறுப்பினர்கள், வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் இரத்த வங்கியின் தலைமை வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு, வை.எம்.எம்.ஏ. சார்பாக தேசிய பொதுப்பொருளாளர் இஹ்ஸான் ஹமீத், பதுளை மாவட்டப் பணிப்பாளர் ஏ.ஏ. ஜுனைதீன், கம்பளை வை.எம்.எம்.ஏ. தலைவர் இஹ்திஸான், பொரகஸ் வை.எம்.எம்.ஏ. தலைவர் சத்தார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நுவரெலிய வை.எம்.எம்.ஏ. தலைவரின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.

ஐ.ஏ. காதிர்கான் 

No comments:

Post a Comment

Post Bottom Ad