தோட்ட நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை கொண்டுவந்து நடைமுறைப்படுத்த வேண்டும், அரசாங்கத்தின் நல்ல விடயங்களை நாம் முழுமையாக ஆதரிப்போம் - வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

தோட்ட நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை கொண்டுவந்து நடைமுறைப்படுத்த வேண்டும், அரசாங்கத்தின் நல்ல விடயங்களை நாம் முழுமையாக ஆதரிப்போம் - வடிவேல் சுரேஷ்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

மலையக மக்களின் சம்பள கொடுப்பனவு விடயங்களிலும் எமது முழுமையான ஆதரவை நாம் கொடுப்போம். ஆனால் இதில் எமது மக்கள் வஞ்சிக்கப்படாது அவர்களுக்கான நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தோட்ட நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை ஜனவரியில் கொண்டுவந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தில் எமது சமூகம் சார்ந்த நலன்கள் குறித்து கவனம் செலுத்தும் நிலையில் பாட்டி வடை சுட்ட கதையே நினைவுக்கு வருகின்றது.

இந்த மாதிரி கதைகள் எல்லாம் பல வரவு செலவு திட்டங்களில் நாம் பார்த்துள்ளோம். ஆனால் மலையக மக்களையோ, மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையோ யாரும் முட்டாளாக கருதிவிடக்கூடாது.

இந்த வரவு செலவு திட்டத்தில் பிரதமர் முன்மொழிந்த ஆயிரம் ரூபாய் பிரேரணையை நாம் முழுமையாக வரவேற்கின்றோம். ஆனால் நடைமுறை சாத்தியப்படக்கூடியதாக இருக்க வேண்டும். 

ஆயிரம் ரூபாய் சம்பள கொடுப்பனவு குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றது. ஐந்து ஆண்டுகளாக ஆயிரம் ரூபாய் பற்றி பேசிக் கொண்டுள்ளோம். ஆனால் இன்று வாழ்க்கைச் செலவு எந்த மட்டத்தில் உள்ளது என ஆராய வேண்டும்.

இந்த விடயத்தில் முன்னைய அரசாங்கம் தவறிழைத்தது, அந்த சாபக்கேட்டின் காரணமாகவே இன்று ஐக்கிய தேசிய கட்சியில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில் இல்லாது போய்விட்டனர். 50 ரூபாவை கூட கொடுக்க முடியாது என தடுத்த அமைச்சர்கள் உள்ளிட்ட சகலரையும் மக்கள் நிராகரித்தனர். 

அதுமட்டுமல்ல இந்த நாட்டில் எந்தவித தலையிடியும் கொடுக்காத மக்களே எமது மக்கள், ஆயுதம் ஏந்தவில்லை, தீவிரவாதம் பேசவில்லை, இந்த நாட்டின் முதுகெழும்பாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு சம்பளத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கங்கள் இவ்வளவு யோசித்து வருகின்றது.

ஆயிரம் ரூபாய் சம்பள கொடுப்பனவுகள் தருவதாக கூறுகின்றனர், 2020 தை மாதம், புதுவருடம், தேர்தல் முடிந்த பின்னர் என கூறிக்கொண்டு இருந்தவர்கள் இப்பொது 2021 ஆம் ஆண்டு தருவதாக கூறிவிட்டனர்.

அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும், ஆனால் எமது மக்களை வஞ்சித்து தண்டிக்கக்கூடாது. முதலாளிமார் சம்மேளனம் இன்று ஆயிரம் ரூபாய் கொடுக்க மாட்டோம் என கூறுகின்றனர். அரச சொத்துக்களை 22 நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது.

எனவே அரசாங்கம் இதற்கு எதிராக சட்டங்களை கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது மக்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு நிவாரணம் என எதுவுமே இல்லை.

அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்க நாம் தயராக இல்லை, நல்ல விடயங்களை நாம் முழுமையாக ஆதரிப்போம். சம்பள கொடுப்பனவு விடயங்களிலும் எமது முழுமையான ஆதரவை நாம் கொடுப்போம். மக்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும், இந்த நாட்டில் வாழும் மக்களில் எமது மக்களே மோசமாக தண்டிக்கப்படுகின்றனர். இதனை எண்ணி நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். 

கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து எமது சமூகத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை. விலை குறைப்பு இடம்பெறவில்லை என்றார்.

No comments:

Post a Comment