யாழில் ஒரு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவருக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Saturday, November 14, 2020

யாழில் ஒரு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனம் கொண்டு சென்ற நிலையில் சந்தை மூடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நபர் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வீடு திரும்பிய அவர், நல்லூர் மருத்துவ சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலில் அங்கு தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவரிடம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு நாளை பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

மினுவாங்கொட பகுதியில் கடந்த ஒக்டோபர் நான்காம் திகதி கொரோனா வைரஸ் தொற்று கொத்தணி கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் 11ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad