வரவு செலவு திட்டத்தையும் குடமொன்றில் அடைத்து ஆற்றில் எறியுங்கள், மறைத்து வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே முயற்சி - சமிந்த விஜேசிறி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

வரவு செலவு திட்டத்தையும் குடமொன்றில் அடைத்து ஆற்றில் எறியுங்கள், மறைத்து வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே முயற்சி - சமிந்த விஜேசிறி

(செ.தேன்மொழி) 

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் சீனாவினால் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருளை போன்று அழகாக இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை. எனவே வரவு செலவு திட்டத்தையும் குடமொன்றில் அடைத்து ஆற்றில் எறியுமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அவருக்காக வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு மதிப்பளிப்பதாக கூறியிருந்தார். ஆனால் அவர் நேற்றுமுன்தினம் ஆற்றிய உரையை நாட்டு மக்கள் எவருமே கேட்கவில்லை என்பதே உண்மை. தொடர்ந்தும் நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றோம்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும், ஆரோக்கியம் தொடர்பிலும் கவனத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டமா என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனூடாக வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கே முயற்சித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த கால ஆட்சியில் அவரும், அப்போது பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினாலும் சேர்த்து வைக்கப்பட்ட கறுப்பு பணங்களை நாட்டுக்கு கொண்டு வந்து வெள்ளை பணங்களாக மாற்றுவதிலே இவர்கள் கவனம் செலுத்தி உள்ளனர்.

நாட்டு மக்களை ஏமாற்றுவது இலகு என்பதாலும் தங்களது வெற்றிக்காக உழைத்த உயர்மட்டத்திலான வர்த்தகர்களை ஏமாற்றுவது கடினம் என்பதனாலும், வற் வரியை குறைத்தார்கள் ஆனால், இந்த வரிக்குறைவால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் ?

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நலன்புரி சேவைகளுக்காக மாத்திரமே அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை.  ஜனாதிபதியின் எண்ணப்படி வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்கள் மரணிக்க எஞ்சியவர்கள் வாழட்டும் என்பதே முடிவாக இருக்கின்றது.

மக்களை கடனுக்குள் சிக்க வைத்திருக்கும் இந்த வரவு செலவு திட்டம் சீனாவினால் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருளை போன்றுள்ளது. அதில் எந்த பயனும் கிடைக்காது. இந்த வரவு செலவு திட்டத்தை குடத்திற்கு அடைத்து ஆற்றில் எறிய வேண்டும். எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தை இல்லாதொழித்து எமது கட்சி தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றார்.

No comments:

Post a Comment