ஒரு வருடத்துக்கு பின்னரே வரவு செலவு திட்டத்தின் பிரதிபலன்களை கண்டுகொள்ள முடியும் : கெஹலிய ரம்புக்வெல - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

ஒரு வருடத்துக்கு பின்னரே வரவு செலவு திட்டத்தின் பிரதிபலன்களை கண்டுகொள்ள முடியும் : கெஹலிய ரம்புக்வெல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு அதனை வெற்றி கொண்ட வரலாறு எமக்கு இருக்கின்றது. அதனால் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகளை எமக்கு நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னுக்கு கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு வருடத்துக்கு பின்னரே வரவு செலவு திட்டத்தின் பிரதிபலன்களை கண்டுகொள்ள முடியும். எதிர்க்கட்சியினர் வரவு செலவு திட்ட யோசனைகளை இலக்கங்களாலும் கணக்கறிக்கைகளினாலும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இவர்களின் வாதம் ஒரு வருடத்துக்கு பின்னரே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு வருடத்துக்கு பின்னரே இந்த வரவு செலவு திட்ட யோசனைகள் வெற்றியடைந்துள்ளதா அல்லது தோல்வியுற்றுள்ளதா என தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் 2005 இல் ஆட்சியை பெற்றுக் கொள்ளும்போது உலக பொருளாதார நெருக்கடி, சுனாமி பேரழிவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என பிரதான மூன்று நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தார். அன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு பெறுமதி 24.4 டொலர் மில்லியனாக இருந்தது. 98.2 கடன் சுமையை 9 வருடத்தில் 72.3 க்கு குறைக்க முடியுமாகியது. நாட்டின் பெறுமதியை 79.4 டொலர் மில்லியன் வரை அதிகரிக்க முடியுமாகியது.

இந்த விடயங்கள் அன்று கனவாகவே இருந்தது. இன்றைக்கும் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைனளை எதிர்க்கட்சியில் சிலர் கனவு என்றே தெரிவிக்கின்றனர். ஆனால் கனவுகளை நனவாக்கும் குழுவே இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. 2005 இல் தனிநபர் வருமானம் 1242 ஆகவே இருந்தது. 9 வருடத்தில் அது 3819 வரை அதிகரிக்க முடியுமாகியது. 2005 இல் கடன் சுமை 2.2 ட்ரில்லியன். அது 7.4 வரை அதிகரித்தது.

கடந்த அரசாங்கம் கடன் அடைப்பதற்கு என 5 ட்ரில்லியன் கடன் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். அப்படியானால் கடன் குறைவடைந்திருக்க வேண்டும். அதனால் கடன் அடைப்பதற்கு கடன் எடுப்பது என்பது பொய்யான தர்க்கம். என்றாலும் நாட்டின் எதிர்காலம் மிகவும் சவால் மிக்கது என்பனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடிய சக்தி எமக்கு இருக்கின்றது.

அதனால் கடந்த காலங்களில் நாங்கள் சவால்களை வெற்றி கொண்டது போல் எதிர்காலத்தில் வரும் சவால்களை வெற்றி கொள்ளக் கூடிய சக்தி எமக்கு இருக்கின்றது என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment