ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறிமை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும் - ஐரோப்பிய ஒன்றியம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறிமை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும் - ஐரோப்பிய ஒன்றியம்

(நா.தனுஜா) 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறிமை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். எனினும் பன்முக சமூகங்கள் மத்தியில் சமாதானம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் நீதியை ஊக்குவிப்பதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதால் அதற்கு அவசியமான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது. 

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரொமேனியா தூதரகங்கள் இணைந்து நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது வர்த்தகம் என்பது ஒரு வழித்தடம் அல்ல. தற்போது இலங்கையில் காணப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை மற்றும் ஐரோப்பிய வியாபாரங்களில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, பிராந்தியத்தின் மையமாகத் திகழும் இலங்கையின் வர்த்தக முயற்சிகளுக்கு பெரும் தடையேற்பட்டுள்ளது.

கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக பெருமளவு புதிய சவால்கள் தோற்றம் பெற்றிருக்கும் நிலையில், கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் நாமும் எமது அங்கத்துவ நாடுகளின் தூதரகங்களின் அதிகாரிகளும் பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களை முன்னெடுத்து வந்திருக்கிறோம்.

இதில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பும் குறிப்பிடத்தக்கதாகும். அவருடனான சந்திப்பின்போது, கடந்த 25 வருடகாலப் பகுதியில் இலங்கைக்கு பரஸ்பர உதவிகளுக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் யூரோக்களுக்கு அதிகமான நன்கொடை உதவிகளை வழங்கி, நம்பகமான ஒரு பங்காளராக நாம் திகழ்கின்றோம் என்பதை சுட்டிக் காட்டியிருந்தோம். எமது அபிவிருத்திக்கான பங்காண்மைக்கு மேலாக, இலங்கையின் முக்கியத்துவமிக்க பொருளாதாரப் பங்காளராக நாம் இருப்பதையும் நினைவூட்டியிருந்தோம்.

குறிப்பாக மனித உரிமைகள், ஊழியர், சூழல், காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி ஆகியன உள்ளடங்கலாக 27 சர்வதேச மாநாடுகளின் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் பொருட்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலமாக ஐரோப்பிய சந்தையில் இலங்கை பெருவாரியான வாய்ப்புக்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய வியாபார முன்னுரிமைகள் காரணமாக, உலகலாவிய ரீதியில் இலங்கையின் இரண்டாவது மாபெரும் ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகின்றது.

வர்த்தகம் என்பது ஒரு வழித்தடம் அல்ல. தற்போது இலங்கையில் காணப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை மற்றும் ஐரோப்பிய வியாபாரங்களில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, பிராந்தியத்தின் மையமாகத் திகழும் இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் தடையேற்பட்டுள்ளது. 

ஏற்றுமதிக்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் இறக்குமதியை பாதிப்பதனூடாக ஏற்றுமதியிலும் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உலக வர்த்தக நிறுவனத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைவாக நீண்டகால இறக்குமதித் தடை காணப்படவில்லை என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறிமை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இலங்கையின் பன்முக சமூகங்கள் மத்தியில் சமாதானம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் நீதியை ஊக்குவிப்பதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இது குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அறிவித்திருந்தது. 

எனவே இதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதுடன் அதற்கு சட்டம், நீதி மற்றும் துடிப்பான சிவில் சமூகம் போன்றவை அத்தியாவசியமானவையாக அமைந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

எமது பகிரப்பட்ட சர்வதேச அர்ப்பணிப்புக்கள் மற்றும் கடப்பாடுகளின் பிரகாரம் இலங்கையுடன் ஆழமான ஈடுபாட்டைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment