மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - முன்னிலை சோசலிசக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - முன்னிலை சோசலிசக் கட்சி

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை நோக்குகையில், ஆட்சியாளர்கள் எமது பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்று நம்புவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது. எனவே மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விக்குழு செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

அக்கட்சியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான பலருக்கு நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில், ஒட்டு மொத்த சமுதாயமுமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. 

இந்த வைரஸ் பரவலின் விளைவாக ஒரு சமூகம் என்ற வகையில் நாம் எத்தகைய நிலையிலிருக்கிறோம் என்பதை உணர முடிந்தது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாகக்கூறி உண்பதற்கு அரிசி வாங்குவதற்குச் சென்றவர்களைக்கூட பொலிஸார் கைது செய்தனர். அதனை ஊடகங்களிலும் காண்பித்தார்கள். எனினும் அந்தச் சட்டத்தை வெகுவாக மீறிச் செயற்பட்ட பெரு நிறுவனங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

தமது ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறி தென்பட்ட போதிலும், சாதாரண மருந்துகளை வழங்கி அவர்களைத் தொடர்ந்தும் பணிபுரியுமாறு நிர்பந்தித்த மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனினும் சாதாரண அப்பாவி பொதுமக்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாகப் பிரயோகிக்கப்படுகிறது. அவர்களது நிலைகுறித்து அரசாங்கத்திற்கு எவ்வித அக்கறையும் இல்லை.

தற்போதைய நிலவரத்தின் விளைவாக தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் கண்டறியப்பட்ட போதே நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அது பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

பெரு நிறுவனங்களில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட போது, நாட்டின் பொருளாதாரத்தை முடக்க இயலாது எனக்கூறி அரசாங்கம் ஏனைய பகுதிகளை அபாயத்தில் தள்ளியது. இவ்வாறான நெருக்கடிகளின் போது சாதாரண மக்களின் பக்கமிருந்து அரசாங்கம் சிந்திக்கவில்லை. 

அரசியல் அதிகாரத்தில் மாற்றம் ஏற்படாமல் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இவ்வாறான நிலையில் இன்னமும் ஆட்சியாளர்கள் எமது பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்று நம்புவதில் பயனில்லை. 

எனவே அனைவரும் உயரிய மட்டத்தில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றும் அதேவேளை, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்துவோம். 

எனினும் நீண்டகால அடிப்படையிலான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இதனை முழுவதுமாக மாற்றியமைக்க முடியாது. ஒன்று தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் காட்டின் சட்டத்திற்கு இடமளித்து பேரழிவை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment