துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட சார்லி ஹேப்டோ பத்திரிக்கை - அதிகரிக்கும் துருக்கி பிரான்ஸ் மோதல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட சார்லி ஹேப்டோ பத்திரிக்கை - அதிகரிக்கும் துருக்கி பிரான்ஸ் மோதல்

துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து சார்லி ஹேப்டோ பத்திரிக்கை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோ பல ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்ட பின்னர் 2011, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அந்த பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையின் கார்ட்டூனிஸ்ட் உட்பட பத்திரிக்கை ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தை பாடசாலை வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16ம் திகதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க முயன்ற ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வந்த 18 வயது இளைஞனை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

அதன்பின் கேலிச் சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.

அப்போது பேசிய ஜனாதிபதி இம்மானுவேல், ’கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை’ என தெரிவித்தார். 

ஆனால், இம்மானுவேலின் கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. 

குறிப்பாக, இந்த விவகாரத்தில் பிரான்ஸ் மீது துருக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. துருக்கி ஜனாதிபதி தாயூப் எர்டோகன் பிரான்ஸ் ஜனாதிபதி மீதும் சார்லி ஹேப்டோ மீதும் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறார். 

ஏற்கனவே கிரீஸ் - துருக்கி கடல்பரப்பு விவகாரம், அர்மீனியா - அசர்பைஜான் விவகாரத்தில் துருக்கி - பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

தற்போது, வரலாற்று ஆசியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் துருக்கி - பிரான்ஸ் இடையேயான வார்த்தை போர் முற்றியுள்ளது.

இந்நிலையில், துருக்கி ஜனாதிபதி தாயூப் எர்டோகனை விமர்சிக்கும் விதமாக சார்லி ஹேப்டோ பத்திரிக்கை சர்ச்சைக்குரிய வகையில் கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த கேலிச் சித்திரத்திற்கு துருக்கு ஜனாதிபதி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு ’வெறுக்கத்தகு தாக்குதல்’ என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். 

எர்டோகன் மீதான சார்லி ஹேப்டோவின் கேலிச் சித்திரத்தை கண்டித்தும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேலுக்கு எதிராகவும் துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்றது.

No comments:

Post a Comment