கொரோனாவின் அடுத்த அலை : ஆபத்தைக் கொண்டு சேர்க்கும் வீசி எறியப்படும் முகக்கவசங்கள், கையுறைகள் - அணியாவிட்டால் தண்டப்பணம் : அணிந்ததை கண்ட கண்ட இடங்களில் கழற்றி வீசினால்..?? - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

கொரோனாவின் அடுத்த அலை : ஆபத்தைக் கொண்டு சேர்க்கும் வீசி எறியப்படும் முகக்கவசங்கள், கையுறைகள் - அணியாவிட்டால் தண்டப்பணம் : அணிந்ததை கண்ட கண்ட இடங்களில் கழற்றி வீசினால்..??

கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாப்புப்பெறும் வழிவகைகள் தொடர்பில் பல்வேறு விழிப்பூட்டல்களும் சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டுமென அரசும் சுகாதாரத்துறையும் வலியுறுத்தி எச்சரித்து வருவதுடன், குறித்த நடைமுறைகளைப் பின்பற்றாமல், மீறுகின்றவர்க்ளுக்கு எதிராக நடவடிக்கையும் தண்டப்பணமும் அறவிடப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், நாமனைவரும் கட்டாயம் இந்நடைமுறைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும். அப்போது தான் கொரோனாவின் தாக்கத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதுடன், மற்றவர்களுக்கும் பரவாமல் காத்துக் கொள்ளவும் முடியும். 

கொரோனா பரவலுக்கும் ஒருவரிலிருந்து மற்றவருக்கு தொற்றிக் கொள்வதற்கும் பல்வேறு காரணிகள் அடையாளப்படுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், கொரோனா தொற்றவுள்ள ஒருவர் பாவித்த உபகரணங்கள், பொருட்கள் ஊடாகவும் அது இலகுவாக மற்றவரைச் சென்றடையலாம் என்ற நிலையுள்ளது. 

கொரோனா விஸ்வரூபமெடுத்துள்ள இன்றைய சூழலில் முகக்கவசப் பாவனை கட்டாயப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம் கருதி எவ்வாறான முகக்கவசங்களை எவ்வாறு அணிய வேண்டும் என்ற நடைமுறைகளும், அதனைப் பாவித்த பின்னர் எவ்வாறு அதனை அகற்ற வேண்டும்? அகற்றிய முகக்கவசங்களை, கையுறைகளை எவ்வாறு பாதுகாப்பான இடங்களில் இடப்பட்ட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டே வருகின்றது. 

சகல தரப்பினரும் முகக்கவசம் அணிய வேண்டுமென்ற கட்டாய நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை நாம் கரிசனையோடு நடைமுறைப்படுத்திய வருகின்றோம். கடந்த சில தினங்களாக முகக்கவசம், கையுறைப் பாவனையும் கடந்த போன தினங்களை விட அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், பாவித்த பின்னர் அகற்றப்படும் முகக்கவசங்கள், கையுறைகளால் கொரோனாவின் அடுத்த அலை உருவாகிவிடுமோ என்ற அச்சநிலையும் உருவாகியுள்ளது. 

அகற்றப்படும் முகக்கவசங்கள், கையுறைகள் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கழற்றி வீசப்படுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக, முகக்கவசங்கள் அணியும் நோக்கம் சிதைக்கப்பட்டு, கொரோனா பரவலுக்கான காரணியாக மாறி விடுமோ என்ற அச்சமும் எழாமலில்லை. 

வீதிகள், பொது மக்கள் நடமாட்டமுள்ள பொது இடங்கள், பாதுகாப்பற்ற முறையில் குப்பைத்தொட்டிகளில், பாடசாலைகள், மதஸ்தலங்கள் உள்ள பிரதேசங்களிலெல்லாம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், நீர் நிலைகள், கடற்கரை ஓரங்களிலும் பாவித்து அகற்றப்பட்ட முகக்கவசங்களைக் காணக்கூடியதாக உள்ளது. 

இவ்வாறான கண்ட கண்ட இடங்களில் கழற்றி வீசப்படும் முகக்கவசங்கள், கையுறைகளால் கொரோனா தொற்று காவிச் செல்லப்பட்டு மற்றவர்களுக்கு பரவலை ஏற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், நீர் நிலைகளில் வீசப்படும் முகக்கவசங்களால் நீர் நிலைகளும் மாசுபடும் அபாயகரமான சூழலும் விலங்கினங்கள், பறவைகளும் அதனை காவிச்சென்று பரவலடையச் செய்ய அதிகம் வாய்ப்புள்ளதையும் கவனத்திற் கொள்வோமாக. 

அண்மையில் உயிரினங்களும் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தகவல்கள் வெளிவந்தமையும் அதற்கு இவ்வாறான செயற்பாடும் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதையும் மறுக்க முடியாது. 

வீசியெறியப்படும் இவ்வாறான பொருட்கள் காற்று மற்றும் வெவ்வேறு காரணிகளால் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு கடத்தப்படவும் அதனால் கொரோனாவும் பரவும் வாய்ப்பும் உள்ளது. 

முகக்கவசங்கள், கையுறைகள் அணிவது நம்மையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கத்தில். அது அப்படியாகவே அமைய வேண்டுமேயொழிய மற்றவர்களுக்கு அசெளகாரியங்களை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்து விடக்கூடாது. 

ஆகவே, பாவித்து முகக்கவசங்கள், கையுறைகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுவதுடன், சூழலைப்பாதிக்காத வகையில் எரிக்கப்படாலும் பாதுகாப்பானதாக வேறு இடஙக்ளுக்கு கடத்தப்படாத வகையில் இருக்கும். 

அத்தோடு, கண்ட கண்ட இடங்களில் முகக்கவசங்கள், கையுறைகளை கழற்றி வீசும் நாமே இது விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இவ்வாறான விடயங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். 

இவைகளைக் கருத்திற்கொண்டு செயற்படுவமாக இருந்தால், கொரோனாவிலிருந்து நாமும் பாதுகாப்புப் பெற்று, மற்றவர்களையும் பாதுகாத்து, சுகாதாரத்துறையினரின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களாவோம். 

எம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline)

No comments:

Post a Comment

Post Bottom Ad