யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்

"வலி தெற்கு பிரதேச சபையே, வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே" என எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்று (29) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கையினை புறக்கணித்து, சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சந்தைக் கட்டட தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கும் இடத்தின் அளவீடு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "மக்கள் பிரதிநிதிகளான உங்களுக்கு எங்களை மக்களாக தெரியவில்லையா?", "எமக்கு உரிய இடத்தினை பழையதுபோல் நிறைவாகத் தாருங்கள்", "உங்களுடைய முதலாளித்துவ அதிகாரத்தை ஏழை பாட்டாளிகள் மீது திணிக்காதே.", "வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்" என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக கடந்த 22ஆம் திகதி பிரதேச சபைக்கு முன்பாகவும் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஐங்கரன் சிவசாந்தன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad