எம்.சி.சி ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒருபோதும் கைச்சாத்திடாது, கைச்சாத்திட்டால் அரசாங்கத்தில் இருக்கமாட்டோம் - அமைச்சர் விமல் வீரவன்ச - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

எம்.சி.சி ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒருபோதும் கைச்சாத்திடாது, கைச்சாத்திட்டால் அரசாங்கத்தில் இருக்கமாட்டோம் - அமைச்சர் விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேசத்தின் மத்தியில் தலை குணியும் அரசாங்கத்தை நாட்டு மக்கள் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒருபோதும் கைச்சாத்திடாது. ஒருவேளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிலை ஏற்பட்டால் அரசாங்கத்தில் இருக்கமாட்டோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கைத்தொழில் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் எம்.சி.சி ஒப்பந்தத்தின் முதல் வரைபு கைச்சாத்திடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அவரது தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அமெரிக்க இராஜாங்க செயலாளரது வருகையினை தொடர்ந்து அரசாங்கம் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட முனைவதாக அரசியல் பிரசாரம் செய்கிறார்கள். எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என மைக் பொம்பியோ தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மைக் பொம்பியோ அல்ல அவரை விட அதிகாரம் கொண்டவர் எவரும் இலங்கையின் சுயாதீனத் தன்மைக்கு கட்டுப்பட வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றுள்ளது. நாட்டுக்கு எதிரான எம்.சி.சி ஒப்பந்தத்தை ஏற்க போவதில்லை என்பது அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது. எந்நிலையிலும் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட மாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad