இரத்ததானம் வழங்கலால் தொற்றா நோயினால் அவஸ்தைப்படுவோரே அதிக நன்மை அடைகின்றனர் - வை.எம்.எம்.ஏ. தலைவர் சஹீத் எம் ரிஸ்மி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

இரத்ததானம் வழங்கலால் தொற்றா நோயினால் அவஸ்தைப்படுவோரே அதிக நன்மை அடைகின்றனர் - வை.எம்.எம்.ஏ. தலைவர் சஹீத் எம் ரிஸ்மி

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் வை.எம்.எம்.ஏ. பேரவை இரத்ததானம் வழங்கல் நிகழ்வுகளை நடாத்தி வருகிறது. இதனால், தொற்றா நோயினால் அவஸ்தைப்படும் பெரும்பாலானோர், அதிக நன்மை அடைந்து வருகின்றனர் என்று, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்தார்.

மாத்தளை தள வைத்தியசாலையின் அனுசரணையுடன், மாத்தளை வை.எம்.எம்.ஏ. கிளை மற்றும் சமாதி நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து நடாத்திய இரத்ததான நிகழ்வு, மாத்தளை பெளத்த மந்திர மண்டபத்தில் நடைபெற்றது. 

மாத்தளை வை.எம்.எம்.ஏ. தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அப்துல் சஹீர் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்பு நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, கொவிட்-19 வைரஸ் பரவல் காலகட்டத்திலும் கூட, இவ்வாறான இரத்ததான நிகழ்வுகளை, தொற்றா நோயாளர்களின் நன்மை கருதியே நடாத்தி வருகின்றோம். 

கர்ப்பிணித் தாய்மார்கள், புற்றுநோயினால் வாடுபவர்கள், விபத்தினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் வழமையான தேவையுடையவர்களுக்காகவே இவ்வாறான நன்மையான கைங்கரியத்தைச் செய்கின்றோம். இதனால், நாம் நன்மை அடைவதைவிட, இவ்வாறான தொற்றா நோயினால் அவதிப்படுபவர்களே பெரும் நன்மைகளைப் பெற்று வருகின்றனர். 
இரத்ததான நிகழ்வுக்கு மேலதிகமாக, மர நடுகை மற்றும் சிரமதானப் பணிகள் என்பவற்றையும், வை.எம்.எம்.ஏ. இயக்கம் மிகவும் அர்ப்பணிப்போடு செய்து வருவதையும் இங்கு ஞாபகமூட்டிக் கொள்ள விரும்புகின்றேன். 

பிற மத அமைப்புக்களோடு இன நல்லுறவை முன்னிலைப்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்திட்டத்தை (Nation Building Project) மையமாக வைத்தே, இவ்வாறான பணிகளைப் புரிந்து வருகின்றோம் என்பதையும் பெருமையுடன் முன்வைக்க விளைகின்றேன்.

இவ்வாறான கைங்கரியங்களை, மிகச்சிறப்பாக மேற்கொள்வதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலும், மாத்தளை வை.எம்.எம்.ஏ. தலைவருமான அப்துல் சஹீர் அவர்களுக்கு வை.எம்.எம்.ஏ. சார்பில் எனது பாராட்டுதலையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

குறிப்பிட்ட நிகழ்வுகள் யாவும், அரச மற்றும் சுகாதார விதிமுறைகளை முன்னிலைப்படுத்தி, பாதுகாப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment