இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் ஒத்துழைப்போடு தொடரும் - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் ஒத்துழைப்போடு தொடரும் - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தின்போது சில காழ்ப்புணர்ச்சி அரசியல் பின்னணி அழுத்தங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடு தொடரும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமத் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பொதுச்சந்தைக் கட்டிடம், காலாசார மண்டபம், வாவிக் கரையோர சுற்றுலா மையம் ஆகியவற்றின் நிருமாணப் பணிகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத் தலைமையில் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் புதன்கிழமை 02.09.2020 மாலை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ,எல். அப்துல் அஸீஸ், மாகாண பொறியியல் பிரதிப் பிரதம செயலாளர் ஏ. வேல்மாணிக்கம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஸ், மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே. சந்திரமோகன் அரச பொறியியல் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள், திணைக்கள உயர் அதிகாரிகள், ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ அப்துல் வாஸித், பிரதித் தவிசாளர், நகரசபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் என பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் இறுதியில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன.

அதன்படி பொதுச்சந்தையின் 90 வீதமான கீழ் தளப்பகுதி முடிவுற்றுள்ள நிலையில் மீதமுள்ள கட்டுமானப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் முடித்து மக்கள் பாவனைக்கு பொதுச் சந்தையைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பொதுச்சந்தையின் மேல் தளப் பகுதியின் வேலைகளை முற்றுமுழுதாக நிறைவேற்ற பொதுச்சந்தைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை அடுத்த வருட மாகாண நிதி ஒதுக்கீட்டில் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

கலாச்சார மண்டபத்தின் கட்டுமானப் பணி ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திடமிருந்து விலக்கிக் கொண்டு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைத்து மீதமுள்ள கட்டுமானங்களைப் பூரணத்துவப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

வாவிக்கரையோரம் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் சுற்றுலா மையம் உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் 8 மில்லியன் ரூபா செலவில் இடைநிறுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை மேலும் தொடர்வதற்கான நிதிகளை பெறுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

உயரதிகாரிகளுடனான விஷேட கூட்டத்தின் முடிவில் பொதுச்சந்தைக் கட்டிடம், கலாச்சார மண்டபம் ஆகியவற்றின் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளின் தற்போதைய நிலையினை நாடாளுமன்ற உறுப்பினர் உயர் அதிகாரிகள் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad