20 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஒன்றரை மாதத்துக்குள் நிறைவேற்றுவோம் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

20 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஒன்றரை மாதத்துக்குள் நிறைவேற்றுவோம் - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்) 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை எதிர்தரப்பினரின் ஆதரவின்றி ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவேற்றுவோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஜனாதிபதியுடன் அரசாங்கம் இணக்கமாகவே செயற்படும் என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியாது என்ற காரணத்திற்காகவே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் உருவாக்கத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் உள்ளது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து 20 ஆவது திருத்த சட்ட வரைபு மீள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பு திருத்தம், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பு ஆகியவற்றை உருவாக்குவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் புறக்கணித்தமையால்தான் கடந்த அரசாங்கத்தை முழுமையாக புறக்கணித்தார்கள். அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அரசாங்கம் அரசியலமைப்பினை திருத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

எதிர்தரப்பினரது ஆதரவு இல்லாமல் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் எம்மால் ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவேற்ற முடியும். 

நடைமுறைக்கு பொருத்தமான விடயங்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் அதிகாரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்பட்டு அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment