20 ஆவது திருத்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து பயணிக்க ஐக்கிய தேசிய கட்சி தயார் - ருவன் விஜேவர்தன - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து பயணிக்க ஐக்கிய தேசிய கட்சி தயார் - ருவன் விஜேவர்தன

(எம்.மனோசித்ரா) 

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமையின் அடிப்படையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து பயணிக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளதாக கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவருமான காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜயவர்தனவின் 114 ஆவது ஜனன தின வைபவம் இன்று வியாழக்கிழமை தேசிய ஊழியர் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக எதிர்க்கிறது. நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதொரு அரசியலமைப்பு இதுவாகும். ஆணைக்குழுக்களில் அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பாராளுமன்றத்திடம் வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மீண்டும் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஆணைக்குழுக்கள் மற்றும் 19 இல் காணப்பட்ட ஜனநாயக பண்புகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. 

எனவே 20 இற்கு எதிராக போராடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் மாத்திரமல்ல. மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளது. 

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தலதா அத்துகோரள போன்றோர் தொலைபேசியில் உரையாடினர். வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் ஒன்றிணைந்து எம்மால் பயணிக்க முடியும். 

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சிறந்த தலைவராவார். ஐக்கிய தேசிய கட்சியின் முன்னேற்றத்திற்கு அவரது ஆலோசனை மிக முக்கியமானதாகும். எனவே நிச்சயம் அவரையும் இணைத்துக் கொண்டு கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

இன்றைய வைபவம் மிகச் சிறியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையாலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வருகை தரவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உரிய காலத்தில் சரியான தீர்மானம் எடுக்கப்படும். 

சில பதவிகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் போது கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். அவ்வாறிருப்பினும் கட்சியின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கருத்து முரண்பாடுகள் காணப்படுகிறது என்பதற்காக மீண்டும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முடியாது. 

பொதுத் தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகள் கட்சியை மறுசீரமைப்பதற்கு கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பமாகும். அதற்கமையவே தற்போது கீழ் மட்டத்திலிருந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு பாரியதொரு தோல்வியாகும். இதற்கு ஒருவரை மாத்திரம் குறைகூற முடியாது. அதற்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad