புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில்13 ஆவது திருத்தம் இருக்கக்கூடாது - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் - News View

Breaking

Post Top Ad

Friday, September 18, 2020

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில்13 ஆவது திருத்தம் இருக்கக்கூடாது - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

(இராஜதுரை ஹஷான்) 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமாக செய்துகொண்ட ஒப்பந்தத்தால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிப்போம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூல வரைபில் இனங்காணப்பட்ட குறைபாடுகளை ஜனாதிபதிக்கு அறிவித்தோம். எதிர்பார்க்கப்பட்ட பல ஏற்பாடுகள் மீண்டும் மீளாய்வு குழுவினரால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறைபாடுகளுடன் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் மைத்திரி - ரணில் தலைமையில் செயற்பட்ட பலவீனமாக அரசாங்கமே தோற்றம் பெறும். 

அரசாங்கம் தவறான வழியில் செயற்படும் போது தவறுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு உண்டு பெரும்பான்மையின மக்கள் ஒன்றினைந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலமாக ஸ்தாபித்துள்ளார்கள். ஆகவே அரசாங்கம் என்றும் மக்களின் கருத்துகளுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்க வேண்டும். 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிடும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடியது. மாகாண சபை முறைமையிலால் இந்த நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. அரசாங்கத்துக்கு வீண் செலவுகள் மாத்திரமே மிகுதியாகின. 

நிறைவேற்றுத்துறையின் பிரதிநிதியான ஆளுநர்களினால் மாகாண சபைகள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது. புதிய அரசியலமைப்பின் ஊடாக 13 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். இத்திருத்தத்தை இரத்து செய்வதால் இராஜதந்திர மட்டத்தில் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படாது. 

இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு எமது நாட்டின் அரசியலமைப்பு சார் விடயத்தில் பிறிதொரு நாட்டை தலையீடு செய்ய வைத்தமை தவறான செயற்பாடாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்நியா 13 ஆவத திருத்தத்தை கொண்டு வந்தது. இத்திருத்தத்தினால் இனப்பிரச்சினைகளுக்கு எக்காலக்கட்டத்திலும் தீர்வு கிடைக்கப் பெறவில்லை. இத்திருத்தத்தை முழுமையாக இரத்து செய்ய அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிப்போம். 

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து விடுபட அரசாங்கத்துக்கு முழுமையான அதிகாரமும், பாராளுமன்ற பலமும் தற்போது உள்ளது. அவை முழுமையாக இனிவரும் காலங்களில் செயற்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad