கட்சி தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்க வேண்டும் என எந்த சம்பிரதாயமும் இல்லை, சிரேஷ்ட நிலையை கருத்திற்கொண்டு ஒதுக்க வேண்டும் என்கிறார் நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, August 29, 2020

கட்சி தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்க வேண்டும் என எந்த சம்பிரதாயமும் இல்லை, சிரேஷ்ட நிலையை கருத்திற்கொண்டு ஒதுக்க வேண்டும் என்கிறார் நளின் பண்டார

தேர்தலுக்கு பின் ஐ.தே.கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவோம் - நளின் பண்டார -  Tamilwin
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கும்போது சிரேஷ்ட நிலையை கருத்திற்கொண்டு ஒதுக்க வேண்டும். கட்சி தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்க வேண்டும் என எந்த சம்பிரதாயமும் இல்லை. இவ்வாறான நிலை ஏற்பட்டால் புதிதாக வரும் கட்சி தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்குவதற்கு முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய முறை நிலையியற் கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நிலையியற் கட்டளை 3=2 இன் பிரகாரம் சபாநாயகரின் விருப்பத்தின்பேரிலே ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் கட்சி தலைவர்களுக்கே முன்வரிசையில் ஆசன ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றில்லை.

தற்போது பாராளுமன்றத்தை பார்க்கும்போது முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்டு ஒரு கட்சியில் இருந்து ஒருவர் தெரிவாகி இருப்பவர்களுக்கும் முன்வரிசையில் ஆசனம் துக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இருபது வருடங்களுக்கு அதிக காலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து, அமைச்சர்களாக இருந்த பலர் இரண்டாம் வரிசையில் இருப்பதை காண்கின்றோம். இது பிழையான முன்மாதிரியாகும். இது சரிசெய்யப்பட வேண்டும்.

அத்துடன் கட்சி தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்குவது சம்பிரதாயமும் இல்லை. அவ்வாறு சம்பிரதாயம் இருந்தாலும், ஒரு கட்சியில் இருந்து ஒரு உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு வந்தால் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பாராளுமன்றத்தில் முன்வரிசையில் இடம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். இதனால் இந்த பிழையான முன்மாதிரியை மாற்றியமைத்து சிரேஷ் நிலையில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்க நடவடிக்கை எடுத்து, அதனை முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் எதிர்க்கட்சியில் மாத்திரமல்ல ஆளுங்கட்சியிலும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பின்வரிசையில் இருக்கின்றனர். இது நல்லதில்லை என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், கட்சி தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்குவதென்ற விடயம் தொடர்பாக பாராளுமன்ற செயலாளருடன் கதைத்தேன். அதனால் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கட்சி தலைவர் என்ற விடயத்தை வியாக்கியானப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் புதிதாக வரும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கினால் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்றார்.

இதற்கு சபாநாயர் பதிலளிக்கையில், இது தொடர்பாக கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்வோம் என்றார்.

பாராளுமன்றத்தில் முதல் தடவையாக போட்டியிட்டு தெரிவாகிய சி.வி.விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு எதிர்க்கட்சியில் முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் சிரேஷ்ட உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இரண்டாம் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது.

No comments:

Post a Comment