காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம் - ஐக்கிய நாடுகள் சபைக்கும் மகஜர் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம் - ஐக்கிய நாடுகள் சபைக்கும் மகஜர் கையளிப்பு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினமான நேற்று வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு சர்வதேச நீதி விசாரணையே அவசியம் என்பதை வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி வடக்கு மாகாணத்தில் பிரதான போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வைத்தியசாலை வீதி வழியாக பேரணியாக சென்று யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தின் பிரதான போராட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் பேரணியாக காந்தி பூங்கா வரை சென்றது.

இவ்விரு போராட்டங்களிலும் ஈடுபட்டவர்கள், பதாதைகளை தாங்கியவாறும், கோஷமிட்டவாறும் பேரணியாக சென்றனர்.

யாழில் பேரணியாக சென்றவர்கள் மாவட்ட செயலகம் முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவைக்கு கையளிக்கவென அருட்தந்தை ஒருவரிடம் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வடக்கின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் யாழில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சரவணபவன், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பங்குபெற்றியிருந்தனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பொலிசார் தலையிட்டு தடுக்க முற்பட்ட போதும், அவர்களது தடையையும் மீறி போராட்டம் வெற்றிரமாக மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு, கிழக்கு நிருபர்கள்

No comments:

Post a Comment