சீனாவில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுகின்றன - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

சீனாவில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுகின்றன

கொரோனா தொற்று நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் சீனாவில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தோன்றியது. அதன்பின் அந்த நாடு முழுவதும் வைரஸ் பரவியதால் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாடசாலைகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதன்பின் 3 மாதங்களுக்கு பிறகு சீனாவில் கொரோனா வைரஸ் முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பின்னர் சில மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவினாலும் அதையும் கட்டுப்படுத்தினர்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்திய பிறகு சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சில பாடசாலைகள் திறக்கப்பட்டன. குறைந்த அளவிலான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் அங்கு பாடசாலைகளை முழுமையாக திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தோன்றிய வுகான் நகரில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட உள்ளனர்.

சீனாவில் நேற்று புதிதாக 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். உள்ளூரில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad