மொரீஷியஸ் எண்ணெய் கப்பல் விபத்து - அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

மொரீஷியஸ் எண்ணெய் கப்பல் விபத்து - அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

மொரீஷியஸ் எண்ணெய் கப்பல் விபத்து - அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
மொரீஷியஸ் நாட்டின் கடல் பரப்பில் ஏற்பட்ட எண்ணெய் கப்பல் விபத்தில் மீட்பு நடவடிக்கைகளை அரசு சரிவர கையாளவில்லை என குற்றஞ்சாட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான வகாஹியோ என்ற எண்ணெய் கப்பல் கடந்த மாதம் (ஜூலை 25 ஆம் திகதி) இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் அருகே விபத்துக்குள்ளானது.

பவளப்பாறையில் கப்பல் மோதியதால் கப்பலில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரம் டன் டீசல் மற்றும் எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் மொரீஷியஸ் தீவுப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த எண்ணெய் கப்பல் விபத்து மொரீஷியஸ் தீவுப்பகுதியில் உள்ள கடல் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மொரீஷியஸ் தீவுகள் சம்பவத்தால் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், விபத்து நடைபெற்ற மொரீஷியஸ் தீவுப்பகுதியில் கடந்த சில நாட்களாக டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின. தற்போதுவரை மொத்தமாக 34 டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரைஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தீவுப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கப்பல் விபத்து காரணமாகத்தான் டொல்பின்கள் உயிரிழந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். 2 டொல்பின்கள் காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எஞ்சிய டொல்பின்கள் எவ்வாறு உயிரிழந்தன என்ற விவரம் வெளியிட்டப்படவில்லை. 

இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் நேற்று திரண்ட ஆயிரக்கணக்கானோர் எண்ணெய் கப்பல் விபத்தை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 75 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், எண்ணெய் கப்பல் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மொரீஷியஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment