என்-95 சுவாச கருவிகளை தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம் : அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 29, 2020

என்-95 சுவாச கருவிகளை தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம் : அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு

என்-95 முக கவசங்களை தூய்மையாக்கி மீண்டும் பயன்படுத்தலாமா? ஆய்வுகள் என்ன  சொல்கின்றன - Ippodhu
என்-95 சுவாச கருவிகளை தூய்மைப்படுத்தி மீண்டும் 3 முறை வரை பயன்படுத்தலாம் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்-95 சுவாச கருவிகளை (முக கவசங்களை) டொக்டர்கள், தாதிகள், சுகாதார சார்பு பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினர் பரவலாக பயன்படுத்துகின்றனர். இந்த சுவாச கருவிகளுக்கு பல நாடுகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது.

எனவே இந்த சுவாச கருவிகளை தூய்மையாக்கி விட்டு மீண்டும் பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். இப்போது இந்த ஆய்வின் முடிவுகள், எமெர்ஜிங் இன்பெக்‌ஷியஸ் டிசீசஸ்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

அதில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் இவை
என்-95 சுவாச கருவிகள் கொரோனா வைரஸ் உள்ளிட்ட வான்வழி தொற்றுகளுக்கான வெளிப்பாட்டை குறைக்கின்றன. மேலும் இவை சுய பாதுகாப்பு கவச உபகரணங்களின் முக்கிய அங்கமாகவும் திகழ்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மருத்துவ பணியாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பாடுக்கு உள்ளான என்-95 சுவாச கருவி சோதனை மாதிரிகளில் வடிகட்டி துணியின் சிறிய பகுதிகளை பல்வேறு தூய்மைப்படுத்தும் முறைகளின் கீழ் சோதிக்கப்பட்டன. குறிப்பாக ஆவியாக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு, 70 டிகிரி செல்சியஸ் உலர் வெப்பம், புற ஊதா ஒளி, 70 சதவீத எத்தனால் ஸ்பிரே ஆகிய 4 முறைகள் அடங்கும். இவை நான்குமே என்-95 சுவாச கருவி சோதனை மாதிரி வடிகட்டி துணியில் இருந்து வைரசை நீக்கின.

மறுபயன்பாட்டு ஆயுள் காலத்தை சோதித்து அறிவதற்காக அதே தூய்மைப்படுத்தும் முறைகள் மூலமாக முழுமையாக அப்படியே சுவாச கருவிகளை சுத்தம் செய்தனர். அந்த சுவாச கருவிகளை சோதித்து அறிவதற்காக 2 மணி நேரம் அணிந்து முகத்தில் சரியாக பொருந்தி இருக்கின்றனவா என பார்க்கப்பட்டது.

அவை ஒவ்வொன்றையும் ஒரே முறையை பயன்படுத்தி 3 முறை தூய்மையாக்கினர். அதில் ஆவியாக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தி தூய்மையாக்கிய சுவாச கருவி எந்த தோல்வியையும் சந்திக்க வில்லை. எனவே அந்த சுவாச கருவியை 3 தடவை மீண்டும் பயன்படுத்தலாம். புற ஊதா ஒளி மற்றும் உலர் வெப்பம் கொண்டு தூய்மையாக்கப்பட்ட சுவாச கருவிகளை 3 முறை தூய்மையாக்கிய பின்னர் 2 முறை மீண்டும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்திய சுவாச கருவிகளை ஆவியாக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு தூய்மையாக்குவதுதான் மிகவும் பயனுள்ள முறை என கண்டுபிடித்தனர். ஏனென்றால் 10 நிமிட தூய்மையாக்கலிலேயே வைரசின் தடயங்கள் இல்லாமல் போனது.

இருப்பினும், புற ஊதா ஒளி மற்றும் உலர் வெப்ப முறை இரண்டுமே தூய்மையாக்கல் நடைமுறைகள்தான். அவையும் ஏற்றுக்கொள்ளப்படுபவைதான்.

எத்தனால் ஸ்பிரேயை பொறுத்தமட்டில், அது சுவாச கருவியை சேதப்படுத்தி விடுகிறது. என்-95 சுவாச கருவிகளை தூய்மையாக்குவதற்கு அதை பயன்படுத்த முடியாது.

ஆய்வின் முடிவு என்னவென்றால், என்-95 சுவாச கருவிகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவற்கு என்று வடிவமைத்து இருந்தாலும்கூட, அவற்றை தூய்மையாக்கி 3 முறை வரை பயன்படுத்தலாம் என்பதுதான்.

தூய்மையாக்கிய சுவாச கருவிகளை மீண்டும் அணியும்போது, அவை சரியாக முகத்தில் பொருந்தி இருக்கின்றனவா என்பதை நன்றாக சோதித்து அறிவது மிகவும் முக்கியம் ஆகும்.

No comments:

Post a Comment