அமெரிக்க தூதுவர் பிரதமருடன் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து பேச்சு - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

அமெரிக்க தூதுவர் பிரதமருடன் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து பேச்சு

(நா.தனுஜா) 

அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்திருப்பதுடன், இதன்போது இரு நாடுகளிலும் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி ஆகிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றிருக்கிறது. 

கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இது குறித்து பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இதன்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு முகங்கொடுத்தல் மற்றும் அதன் பின்னரான பொருளாதார ரீதியான சவாலை எதிர்கொள்ளல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல்நிலை குறித்துக் கருத்து வெளியிட்ட டெப்லிட்ஸ் 'தற்போது பொது சுகாதாரத்துறை மேம்பாட்டைந்திருப்பதாகவே நம்புகின்றோம். அது தொடர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்' என்று குறிப்பிட்டார். 
அதேவேளை கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர், நாட்டின் ஆடை உற்பத்தித்துறையின் மேம்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்ட பிரதமர், தற்போது நாட்டின் முன்னணி ஆடையுற்பத்தி நிறுவனங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு அங்கி (PPEs) உற்பத்திகளில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதுவர், இலங்கையின் பல்தேசிய கம்பனிகள் மற்றும் சிறிய, நடுத்தரளவு வணிக முயற்சிகள் இந்நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதைக் காண அமெரிக்கா விரும்புவதாகவும் தெரிவித்தார். 

மேலும் இரு நாடுகளிலும் எதிர்வரவுள்ள தேர்தல்கள் தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியதுடன், நிலுவையிலுள்ள இருநாடுகளும் தொடர்புபட்ட திட்டங்களை சுமூகநிலை திரும்பியதும் தொடர்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad