தேர்தல் விடயத்தில் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்தால் நீதிமன்றங்களை நாடவேண்டி ஏற்பட்டிருக்காது - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

தேர்தல் விடயத்தில் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்தால் நீதிமன்றங்களை நாடவேண்டி ஏற்பட்டிருக்காது

தேர்தல் விடயத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்காது ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்தால் இன்று நீதிமன்றங்களை நாடவேண்டிய சூழல் உருவாகியிருக்காது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ரொலோ இயக்கத்தின் தளபதி குட்டிமணியுடன் நீர்வேலித் தாக்குதலில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பங்கேற்றார் என்பது வரலாறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரட்னத்தின் 34ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு மட்டக்களப்பு 2ஆம் குறுக்கு வீதியிலுள்ள ரெலோ தலைமைக் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கோவிந்தன் கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நினைகூரல் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை பிரதி மேஜர் சீலன், கட்சி ஆதாரவாளர்கள், உறுப்பினர்கள் உப்பட பலர் கலந்து கொண்டு ஸ்ரீ சபாரத்தினத்தின் உருவப் படத்திற்கு முன்னாள் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, ஈகைச் சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து கோவிந்தம் கருணாகரம் உரையாற்றுகையில், “தற்போது, நாட்டில் மாத்திரமல்லாது உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அனைத்து மக்களும் மீண்டுவர வேண்டும். கொரோனா தாக்கம் ஒருபக்கம், அரசியல் தாக்கம் ஒருபக்கமாக எமது மக்கள் குழப்பமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பசி, பட்டினி ஒரு பக்கம் தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது ஒருபக்கம் இருக்க நாடாளுமன்றத்தைக் கலைத்தது சரியா, பிழையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மீண்டும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டுமா, இல்லையா என்ற விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜனபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தது பிழையாகும்.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் பரவிக்கொண்டு வருவதை அறிந்துகொண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து ஏப்ரல் 22 தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது பிழையாகும்.

நாடாளுமன்றத்தைக் கலைக்காது ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்தால் இன்று நீதிமன்றங்களை நாடக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்காது.

எனவே தேர்தல் இல்லாமல் இந்த நாட்டைக் கொண்டு நடத்தக் கூடிய அரசியல் சபை இல்லாமல் ஜனாதிபதி தனிமனிதனாக இந்த நாட்டில் ஓர் இராணுவ ஆட்சி நடத்துவது போல் உள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைக்காதிருந்தால் ஒரு ஜனநாயக நாடாக இருந்திருக்கும்.

இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கம் 1969 ஆம் ஆண்டு தலைவர் தங்கத்துரை தளபதி குட்டிமணி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 50 வருடங்கள் கடந்து பல இன்னல்களைத் தாண்டி எமது மக்களுக்கான சேவைகளைச் செய்வதில் வடகிழக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எமது இயக்கத் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டுமணி போன்றோர் 1981 ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கை பொலிஸாரால் சிறைபிடிக்கும்வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்ததுள்ளதுடன் தளபதி குட்டிமணி தலைமையிலான நீர்வேலியில் இடம்பெற்ற தாக்குதலில் கடைசியாக அவர் பங்குபற்றியிருந்தார் என்பது வரலாறு” என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad