தொழில் வாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கு தோட்டங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் - முன்னாள் எம்.பி. சதாசிவம் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

தொழில் வாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கு தோட்டங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் - முன்னாள் எம்.பி. சதாசிவம்

கொழும்பில் இருந்து வந்து தொழில் வாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கு தோட்டங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

அட்டனில் நேற்று (06.05.2020) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் இது தொடர்பில் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் என்றும் கூறினார்.

'கொழும்பில் இருந்து வந்தவர்கள் இன்று வேலையில்லாமல் இருக்கின்றனர். இவர்களில் தோட்டங்களில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு, பெயர் பதிந்து அதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் பிரதமரிடமும், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரிடமும் கலந்துரையாட திட்டமிட்டுள்ளேன்.

அத்துடன், பல தோட்டங்கள் இன்று காடாக காட்சியளிக்கின்றன. எனவே, தரிசு நிலங்களை தொழிலாளர்களுக்கு வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கலாம். அவ்வாறு அல்லாவிட்டால் தேயிலை மீள் பயிரிடலாம். அது எதிர்காலத்தில் சிறந்த தேயிலை உற்பத்திக்கு வழிசமைக்கும். தோட்டத் தொழிலையும், தோட்டங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும் தொழிலாளர்கள் மத்தியிலும் ஏற்படவேண்டும். 

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியின்மை என பாதுகாப்பு நடைமுறை எதுவும் இன்றியே தமது உழைப்பை தொழிலாளர்கள் வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பான உடை உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். 

வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மல்லி தண்ணீர் சுக்கு தண்ணீர் என்பன வழங்கப்படும். இந்த திட்டம் பற்றி அரசாங்கம் பரீசிலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, 5000 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவும் பெருந்தோட்ட மக்களுக்கு உரிய வகையில் சென்றடையவில்லை. ஒரு சில பகுதிகளில் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. கட்சி, தொழிற்சங்க பேதங்களின் அடிப்படையிலேயே கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad