கொழும்பில் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது, இத்தாலியைப் போன்று இலங்கை பயணிக்கின்றது - எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 22, 2020

கொழும்பில் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது, இத்தாலியைப் போன்று இலங்கை பயணிக்கின்றது - எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(ஆர்.யசி) 

கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த இலங்கையின் தற்போதைய நிலைமையானது இத்தாலியை ஒத்ததாக பயணிப்பதாக எச்சரிக்கை விடுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பேலியகொட மீன்வாடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி மூலமாக கொழும்பில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர். 

இப்போதுள்ள இலங்கையின் நிலவரம் குறித்து அரச வைத்தியர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே கூறுகையில், "கொவிட்-19" கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் ஒரு ஸ்திரமில்லாத நிலையில் முன்னகர்ந்துகொண்டுள்ளது. இது குறித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முன்னாயத்த நடவடிக்கைகள் கூட தோல்வியில் முடிவடையும் நிலைமையே காணப்படுகின்றது. 

உலக நாடுகள் அனைத்துமே இன்று கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விடயத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பல தோல்வியில் முடிவடைந்துள்ளன. இதற்குக் காரணம் என்னவெனில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த சரியான இனங்காணப்படல் கண்டறியப்படாதமையேயாகும். ஆகவே இப்போது நாம் முகங்கொடுக்கும் பிரச்சினைக்கு இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும், நாளை என்ன நடக்கும் என எவருக்குமே தெரியாத நிலையில் இப்போது நாம் முகங்கொடுக்கும் சவால்களுக்கு இப்போது தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். 

ஒவ்வொரு நாளும் புதிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நாளாந்தம் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆகவே நிலைமைகளை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய மிகவும் கடினமாக உள்ளது. நோயாளர்கள் குறித்து மிகக் குறைவான அறிகுறிகளே தென்படுகின்றது. ஆகவே சாதாரண நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

பேலியகொட மீன்வாடியில் நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அவருடன் பலர் பழகியிருக்க வேண்டும். அவர்கள் கொழும்பில் பல பகுதிகளுக்கு சென்றிருக்க வேண்டும். அவர்களை இப்போது கண்டறிய வேண்டியுள்ளது. இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு நோயாளர் நாட்டினை நாசமாக்க போதுமானது. இதில் எந்த நோயாளர்களையும் நாம் குற்றம் சுமத்தவில்லை. ஆனால் ஒரு நோயாளரை விட்டு வைத்தாலும் முழு நாட்டினையும் அது பாதிக்க காரணமாக அமையும். 

இலங்கையின் தற்போதைய நிலையில் இத்தாலியின் நிலைமையை நோக்கி பயணிக்கின்றது. இத்தாலியின் நோயாளர் தாக்கம் குறித்த வரைபை ஒத்த வரைபினை இன்று இலங்கையின் வரைப்பும் காட்டுகின்றது. இதனை சாதாரணமாக நினைத்தால் இலங்கையின் நிலைமை மிக மோசமானதாக அமையலாம். இலங்கையின் இப்போதுள்ள நிலைமை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது என்பதே உண்மையாகும். அரசாங்கம், அதிகாரிகள், மக்கள் அனைவரும் இதனை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். 

அதேபோல் மே மாதம் முதல் வாரம் முடிவும் வரையில் நாட்டின் நிலைமைகளை மிக கவனமாக கையாள வேண்டும். இந்த கால கட்டத்தில் தொற்று நோய் பரவல் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. அரசாங்கம் சில விடயங்களில் தவறிளைக்கின்றது. மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கியமை மிக மோசமானது. 

எனினும் இதனை நாம் ஜனாதிபதிக்கு உடனடியாக அறிவித்தோம். ஜனாதிபதியும் மதுபானசாலைகளை மூட உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதற்கான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல் ஏனைய சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் வலியுறுத்தி வருகின்றோம். எமது நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொள்ள வேண்டும் எனினும் அதனை விடவும் மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad