சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சுகாதாரம், பாதுகாப்பினை உறுதி செய்ய ஐ.சி.ஆர்.சி. நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, April 4, 2020

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சுகாதாரம், பாதுகாப்பினை உறுதி செய்ய ஐ.சி.ஆர்.சி. நடவடிக்கை

கொரோனா வைரஸின் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் உள்ள 24 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சுகாதாரம், பாதுகாப்பினை உறுதி செய்யும் முகமாக சர்வதேச செஞ்சிலுவை குழுமத்தின் இலங்கை பேராயம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

சர்வதேச செஞ்சிலுவை குழுவின் (ஐ.சி.ஆர்.சி) இலங்கை பேராயமானது பொதுமக்களையும், தடுத்து வைக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் மா அதிபர், ஏனைய அதிகாரிகள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. 

இதுதொடர்பில், ஐ.சி.ஆர்.சியின் இலங்கைக்கான பேராயத்தின் தலைவர் லுக்காஸ் பெட்ரிடிஸ் கூறுகையில், ஐ.சி.ஆர்.சியின் உலக பதிலளிப்புத் திட்டத்திற்கும் அவசர கோரிக்கைகளுக்கும் பங்களிப்பு நல்கும் நாம், கொரோனா தொடர்பாக அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவி செய்வதற்கு ஏற்புடைய வகையில் எமது நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம். 

பொதுச் சுகாதாரம், தடயவியல், தடுப்புக்காவலில் சுகாதாரம், தொற்று நீக்கம், கழிவு முகாமைத்துவம் ஆகிய துறைகளில் எமது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கியுள்ளோம். 

இலங்கையில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 1989ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.சி.ஆர்.சி விஜயம் செய்து வருகிறது. அத்தகைய தடுப்புக் காவல்களில் ஆட்கள் நடத்தப்படும் விதத்திற்கும், அவற்றின் நிலைமைகளுக்கும் அதிக முன்னுரிமை வழங்குகிறது. 

இலங்கையில் உள்ள 24 சிறைச்சாலைகளுக்கும், ஐந்து பிரதான பொலிஸ் தடுப்பு நிலையங்களுக்கும் கடந்த மார்ச் 22 ஆம் திகதி சுகாதாரப் பொருட்களையும், தனிநபர் பாதுகாப்புக் கருவிகளையும் ஐ.சி.ஆர்.சி. விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. 

இந்த விநியோக நடைமுறையில் வழங்கப்படும் பொருட்களின் பயன்பாடு பற்றியும், முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் உரிய அதிகாரிகளுடன் துணையுடன் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சிறைச்சாலைகளுக்கும், தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் விநியோகிக்கத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக எமது குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. 

இதுவரையில், நாடு முழுவதும் 20,000 இற்கு மேலான பயனாளிகளுக்கு நாம் உதவிகளை வழங்கியுள்ளோம். தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எமது முயற்சிகளில் இருந்து பின்வாங்கவோ, மந்தமடையவோ முடியாது என்பதை நாம் அறிவோம். 

துரிதமாக தீவிரம் பெற்று வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தேவைகளையும், முன்னுரிமைகளையும் சிறப்பாக புரிந்து கொண்டு, எவ்வளவு சிறப்பாக நாம் அதிகாரிகளுக்கு பங்களிப்பு வழங்க முடியும் என்பதை மதிப்பிடுவதற்காக, அடுத்து வரும் வாரங்களில் தொடர்ந்தும் செயற்படுவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad