ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமினை மூடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம் - கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமினை மூடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம் - கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

பாறுக் ஷிஹான்

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமை தனிமைப்படுத்தல் நோயாளிகள் வரும் வரை குறித்த முகாமினை மூடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு இன்று புதன்கிழமை (29) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், ஒலுவில் கடற்படையினரால் பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தியிருந்த கொழும்பு, ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களில் அனைவரும் நேற்றுடன் இரண்டு வார கால தனிமைப்படுத்தல் முடித்திருக்கிறார்கள். அதில் இறுதியாக 72 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், 35 பாதுகாப்பு மற்றும் படை மருத்துவ உத்தியோகஸ்தர்கள் உட்பட 170 மருத்துவ மாதிரிகள் கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் முடிவுகள் அனைத்தும் நெகட்டிவ்வாக கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமை அடுத்த தனிமைப்படுத்த நோயாளிகள் வரும் வரை மூடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

பொதுவாக, கடற்படையினருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் 200 பேருக்கு ஏற்பட்டதாக எங்களுக்கு புள்ளிவிபரங்கள் கிடைத்திருக்கின்றன. அவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் ஒலுவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்துவதற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தைப் பொறுத்தளவில் அக்கரைப்பற்றில் இரண்டு நோயாளிகள் அடையாளங்காணப்பட்டு அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இன்று அவர்கள் இருவரும் சுகதேகியாக இரண்டு வார சிகிச்சைகளுக்குப் பின்னர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களுடன் நேரடித்தொடர்பு கொண்ட ஐந்து பேர் பொலநறுவை தமின தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்கள். இவர்களுடன் தொடர்புடைய மேலும் 9 பேர் இதுவரை பொலநறுவை சிகிச்சை முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

அவர்களது நிலைமை தற்போது சுமூகமாகவுள்ளது. ஆதலால், அக்கரைப்பற்றைச்சூழ விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அக்கரைப்பற்று, கல்முனை சுகாதார பிராந்தியங்கள் உட்பட அனைத்து பிரதேசங்களும் பாதுகாப்பாகச் சென்று வரக்கூடியளவிற்கு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், வெலிசறை கடற்படை முகாமில் தொற்று நோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து எமது பிரதேசத்திற்குள் மூன்று கடற்படையினர் வெளிசறப் பகுதியிலிருந்தும் மாத்தறைப் பகுதியிலிருந்து மூன்று பேரும் வந்து சென்றுள்ளனர்.

அவர்கள் சந்தேகப்படும் படியாக நடமாடிய இடங்களை நாங்கள் ஆராய்ச்சி செய்திருக்கின்றோம். தொற்று ஏற்படக்கூடிய வகையில் குறித்த வீரர்களுடன் நேரடித்தொடர்புடைய 23 பேர், ஆறு தாதிய உத்தியோகத்தர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நாளை குறித்த கடற்படை வீரர்களின் பரிசோதனை முடிவுகள் வரும் போது, இது குறித்த தனிமைப்படுத்தல் விலக்கிக் கொள்ளப்படும். உண்மையில் வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா தொற்று ஏற்பட்டதைத்தொடர்ந்து விடுமுறையில் சென்ற முப்படையினரையும் தமது முகாமுக்கு மீள அழைக்கும் முடிவை எடுத்திருந்தது.

அதனைத்தொடர்ந்து, அவர்களில் 158 பேருக்கான தங்குமிட வசதிப் பற்றாக்குறை காரணமாக காஞ்சிரங்குடா கால்நடை பயிற்சி மையத்தில் 44 பேரும், கல்முனை வெஸ்லி உயர்தரப்பாடசாலை 74 பேரும், கல்முனை சுபத்திரா ராமர் விகாரையில் 40 பேருரையும் தங்க வைக்கும் முடிவை பாதுகாப்பமைச்சு எடுத்துள்ளது.

இவர்கள் சாதாரண நோய்த்தொற்றுக்கு ஆளாகாத வீரர்கள். எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad