இராணுவத் தளபதிக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

இராணுவத் தளபதிக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அவசியமாகவுள்ள உரிய பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறையொன்று ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவது வரவேற்கத்தக்க விடயமல்ல என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்திட்டத்திற்குப் பொறுப்பாக இயங்கிவரும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த கடிதத்தில், “கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முதலில் உயர் எச்சரிக்கைப் பிரதேசங்களுக்கு ஊடரங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை பெரிதும் வரவேற்கிறோம்.

அதேவேளை, இந்த உயர் எச்சரிக்கைப் பிரதேசங்களிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாகும்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். அதன்படி அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து ஒட்டுமொத்த நாட்டிலும் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அவசியமாக உரிய பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவது திருப்திகரமான விடயமொன்றல்ல.

நோய் நிலைமையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் வாய்ப்பு (சுவாசக்கோளாறு) காணப்படுவதனால் புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதும் தற்போதைய தருணத்தில் மிகவும் அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்குமான அவசிய உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியை நாடுவது சிறந்ததாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad