நான் மட்டக்களப்பு மண்ணையும் மக்களையும் நேசிக்கின்றேன் - சிறையிலிருந்து பிள்ளையான் - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

நான் மட்டக்களப்பு மண்ணையும் மக்களையும் நேசிக்கின்றேன் - சிறையிலிருந்து பிள்ளையான்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி' யை ஆதரிக்க வேண்டுமென சந்தேகக் கைதியாய் சிறையிலிருக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) கோரிக்கை விடுத்தார். 

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை கூறினார். அவர் ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய சொற்ப நேர இடைவெளிக்குள், தான் மட்டக்களப்பு மண்ணையும் மக்களையும் நேசித்து வருவதாக தெரிவித்ததோடு காலச் சூழலினால் சந்தேகக் கைதியாக சிறையிலிருக்க நேரிட்டதையிட்டு கவலைப்பட்டார்.

தான் விரைவில் பிணையில் வெளிவருவதற்குரிய நீதித்துறைச் செயற்பாடுகளை தமது வழக்கறிஞர்கள் விரைவுபடுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னை சுகம் விசாரிப்பவர்களில் அனேகர் கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல வேலைத்திட்டங்கள் இருப்பதை சுட்டிக்காட்டுவதோடு, தான் தனது பதவிக் காலத்தில் ஆரம்பித்த சில திட்டங்கள் குறைபாடுகளோடு ஊர்ந்து செல்வதாகவும் குறிப்பிடுகின்றனர். இச் செய்திகள் தனக்கு மன வேதனையளிப்பதாக குறிப்பிட்டார்.

தனது பதவிக் காலத்தில் தான் பெற்று வளர்த்த பிள்ளை “மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமாகும்” அது சீராக இருக்க வேண்டும் என தான் ஆதங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புளியந்தீவு நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad